அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் தீபாவளி கொண்டாட்டத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் கனவு தம்பதியாக பார்க்கப்படுபவர்கள் அஜித்- ஷாலினி. மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கியே இருக்கும் இந்த தம்பதியின் புகைப்படங்கள் எப்போதாவது சமூகவலைதளங்களில் தலை காட்டும். அந்த வகையில் அஜித் - ஷாலினி தீபாவளி கொண்டாட்டத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப்புகைப்படத்தை ஷாலினியின் சகோதரரான ரிச்சர்ட் ரிஷி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.
அஜித்தும் ஷாலினியும் ’அமர்க்களம்’ படத்தில் நடித்த போது காதலித்தனர். அந்தப்படத்தில் ஷாலினி தனது கையை கத்தியால் வெட்டிக்கொள்ளும் காட்சி ஒன்று வரும். ஆனால் அந்தக்காட்சி படமாக்கப்பட்ட போது, உண்மையாகவே ஷாலினி தனது கையை வெட்டிக்கொண்டாராம். அதன் பிறகுதான் ஷாலினிக்கும் அஜித்துக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அஜித்தே ஒரு பேட்டியில் உறுதி செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து காதலித்த இருவரும் கடந்த 2000 ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அஜித் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் நடித்து வருகிறார். ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் கலவையான விமர்சனத்தை சந்தித்த நிலையில் 3 வது படத்தை பெரும் எதிர்பார்ப்போடு ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அஜித்தின் 61வது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு “துணிவு” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ள நிலையில், ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம், தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடந்தது. கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி துணிவு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியது. துணிவு படம் பொங்கல் வெளியீடாக இருக்கும் என ஓரளவு உறுதியான தகவல் வெளியான நிலையில், அண்மையில் கூட சென்னை அண்ணா சாலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்தது.