அஜித் நடிக்கும் ‘ஏகே 61’ படத்திலும் பைக் ஸ்டண்ட் சம்பந்தமான காட்சி ஒன்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தின் படத்தின் படப்பிடிப்பு முன்னதாக ஆந்திரபிரதேசத்தில் நடப்பதாக தகவல் வெளியான நிலையில், அங்குள்ள அரக்கு பள்ளத்தாக்கில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். அந்தப்பள்ளத்தாக்கில் அஜித் மற்றும் இன்னும் சிலர் பங்கேற்கும் ஒரு பைக் ஸ்டண்ட் காட்சியை எடுக்க இருப்பதாகவும், இது சம்பந்தமான படப்பிடிப்பை ஒரு வாரம் நடத்த ஹெச்.வினோத் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
நேர்கொண்ட பார்வை’, `வலிமை’ ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு மீண்டும் மூன்றாவது முறையாக நடிகர் அஜித் குமார், இயக்குநர் ஹெச்.வினோத் ஆகியோர் இணைகின்றனர். `வலிமை’ திரைப்படம் அதன் ஆக்ஷன் காட்சிகளுக்காக பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும், பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனால் தற்போது இவர்கள் இணைந்திருக்கும் படத்தில் ஒரு பெரிய வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றனர்.
‘ஏகே 61’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்தப்படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாகும் த்ரில்லர் திரைப்படம் எனக் கூறப்படுகிறது. இந்தப்படம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வெளியாகி அவ்வப்போது வைரல் ஆனது.
விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த இந்தப்படப்பிடிப்பிற்கிடையே சிறிய பிரேக் எடுத்துக்கொண்ட அஜித், பைக்கில் லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற அவர், 4 தங்கபதக்கங்களையும், 2 வெள்ளிப்பதக்கங்களையும் வென்றார். அண்மையில் அஜித் அவரது மேலாளர் மூலம் காதுகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இவர்களுடன் ஜான் கொக்கன், வீரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அடுத்தமாதம் படத்தின் டைட்டில், மோஷன் போஸ்டர், ரிலீஸ் தேதி உள்ளிட்டவை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.