ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டவர் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். 'பிங்க்' படத்தின் ரீமேக்கான இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து 'வலிமை' படத்திலும் அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி இணைந்தது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்ததால் அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களிடமெல்லாம் வலிமை அப்டேட் குறித்து கேட்டு வந்தனர்.
இந்தநிலையில், கடந்த பொங்கலுக்கு வலிமை திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக படம் வெளியிடப்படும் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், படம் எப்பொழுது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மார்ச் மாதத்தில் படம் வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகி வருகிறது.
ஏற்கனவே, வலிமை குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்காத நிலையில், தற்போது அஜித் குமார் நடிக்கும் பெயர் வைக்கப்படாத ஏகே 61 படம் குறித்து அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் அஜித் குமார்,போனி கபூர் மற்றும் ஹெச்.வினோத் குழு மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர்.
இதனால் இந்த படம் தொடர்பாக நடிகர் அஜித் குமார் சமீபத்தில் தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்ததாகவும், விரைவில் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் தீயாய் பரவி வருகிறது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும் கடந்த சில நாட்களாக அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் #AK61 என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஏகே 61 படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிக்காக ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருவதாகவும், மார்ச் 9 ம் தேதி படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே நடிக்கலாம் எனவும், அனிருத் இசையமைக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
மார்ச் மாதத்தில் தொடங்கும் இந்த ஷூட்டிங் பாண்டிச்சேரி, ராஜஸ்தான், ஹைதராபாத் போன்ற நகரங்களில் படமாக்கப்பட்டு 7 மாதங்களில் ஷூட்டிங் முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த வருடத்தில் அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் என்று படக்குழு சொல்லாமல் விருந்து வைக்க காத்திருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்