இணைய உலகில் எது வைரலாக வேண்டும் என நிர்ணயிப்பவர்கள் நெட்டிசன்கள் தான். அந்த வகையில், நடிகர் சிங்கம்புலி ஒரு விழா மேடையில் பேசிய பேட்டி ஒன்று தற்போது வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு சினிமா விழாவில் பேசிய அவர், "விழா மேடைக்கு என்னை அழைத்தவர் அடுத்ததாக சிங்கம்புலி வருகிறார் எனக் கூறினார். அவருக்கு என்னைப் பற்றித் தெரியவில்லை. நான் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமாரை வைத்து ரெட் என்ற படத்தை இயக்கி இருக்கிறேன். சூர்யாவை வைத்து மாயாவி என்ற படத்தை இயக்கியுள்ளேன். இயக்குநர் சுந்தர்.சி.யிடம் 10 படங்களில் வசனகர்த்தாவாகப் பணியாற்றியுள்ளேன். ரேணிகுண்டா படத்திற்கு கதை வசனம் எழுதியிருக்கிறேன். அது வெற்றிப் படம் என்பது எல்லோருக்கும் தெரியும். இயக்குநர் பாலாவுடன் பரதேசி, நான் கடவுள் படங்களில் கோ டைரக்டராகப் பணியாற்றியுள்ளேன். பிதாமகன் படத்திற்கு வசனம் எழுதியுள்ளேன்.
ஆனால், இந்த மேடையில் அடுத்ததாக சிங்கம்புலி என்று சொல்லும் அளவுக்குத் தான் இருக்கிறேன். காரணம் என்னைப் பற்றி நான் பேசியதில்லை. இதிலிருந்து நான் ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டேன். நம்மைப் பற்றி நாமே பெருமையாகப் பேசிக் கொள்வதும் அவசியம் தான். அது இல்லாவிட்டால் காணாமல் போய்விடுவோம் போலத் தெரிகிறது" என்று பேசினார். அவரது இந்தப் பேட்டி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிங்கம்புலி சொல்வதைப் போல் நாம் செய்யும் பணியைப் பற்றி நாம் பீற்றிக் கொள்ளாவிட்டாலும் நாம் செய்தது இதுதான் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ளவாவது வெளிப்படையாக பேச வேண்டும்.
யூத மொழியில் ஒரு சொல்வடை உண்டு. நானே எனக்காகப் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார்கள்; நான் என்னைப் பற்றி மட்டுமே சிந்தித்தேன் என்றால் மனிதன் தானா? என்பது தான் அந்த சொலவடை.
இது இப்போது சிங்கம்புலி சொல்லியதற்கு சமமான கருத்து தான். போட்டி உலகில் நம்மை நாம் தக்க வைத்துக்கொள்ள கடின உழைப்புடன் ஸ்மார்ட் உழைப்பும் அவசியம் என்பதற்கு சிங்கம்புலியின் பேச்சு ஒரு சான்று என்று நெட்டிசன்கள் சிலாகிக்கின்றனர்.
சிங்கம்புலி, எப்போதும் ட்ரெண்டில் இருப்பவர். டிக் டாக் கோளோச்சிய காலத்தில், அவர் டிக்டாக்கில் விதவிதமாக வீடியோக்களை வெளியிட்டார்.
அது குறித்து கூட அவர் ஒரு பேட்டியில் பேசியிருப்பார். அப்போது என்னைப் போலவே டிக் டாக் செய்த நபரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். இப்போது அவரும் சினிமாவுக்கு வந்துவிட்டார். இப்போது, அட சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டோமோ எனத் தோன்றுகிறது எனக் கேஷுவலாகக் கிண்டலாகப் பேசி இருந்தார்.