அஜித் தன்னிடம் பணம் வாங்கி கொண்டு நடிக்காமல் ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.


கமல் நடிப்பில் வெளிவந்த ‘வேட்டையாடு விளையாடு’, வடிவேலு நடித்த ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ படங்களை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். இவரது தயாரிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படம் 15 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலில் மேம்படுத்தப்பட்டும் மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. அதற்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்த நிலையில் மாணிக்கம் நாராயணன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், அல்டிமேட் ஸ்டார் அஜித் குமாரை சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். 


அதில், “1996-97 காலக்கட்டத்தில் என்னை பார்க்க வந்த அஜித், அவருடைய பெற்றோர் மலேசியா, சிங்கப்பூர் செல்ல இருப்பதாக கூறி பணம் கேட்டார். பின்னாளில் படத்தில் நடித்து அந்த பணத்தை சரிசெய்து கொள்வதாக அஜித் கூறினார். அவரின் பேச்சை கேட்டு அஜித்துக்கு ரூ.6 லட்சம் வரை பணம் கொடுத்தேன். வெடிமுத்து படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அஜித், திடீரென அந்த படத்தில் நடிக்காமல் பின் வாங்கி விட்டார். பின்னர், தான் நடித்த ரெட் படத்தை வாங்கி விநியோகிக்கும்படி என்னிடம் அஜித் கேட்டு கொண்டார். அதனால், ரூ.40 லட்சம் கொடுத்து ரெட் படத்தை வாங்கினேன். ஆனால், படம் ஓடாமல் தோல்வி அடைந்ததால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. 


அப்போது அஜித்தை சென்று பார்க்கும்போது தனக்கு நேரம் சரியில்லாததால், பிறகு படம் நடிப்பதாக கூறி என்னை அனுப்பினார்.  எனது மகனின் திருமணத்துக்கு அழைக்க அஜித்துக்கு ட்ரெஸ் எடுத்து கொண்டு பத்திரிகையுடன் சென்றேன். அப்போது என்னைப் பார்க்காமல் அஜித் தவிர்த்தார்.


படத்திலும் நடிக்காமல், பணத்தையும் தராமல் காலம் தாழ்த்தியதால் அஜித்திடம் பணத்தை தரும்படி கேட்டேன். அதற்கு பேங்க் செக் நம்பர், டிராஃப்ட் எல்லாம் தரும்படி அஜித் கேட்டார். அஜித்துக்கு பணம் தந்த ரெக்கார்ட்ஸ் எல்லாம் என்னிடம் இருக்கும்போது, ”நான் பணம் வாங்கவில்லை நாராயணன் தெரியாமல் பணம் வாங்கியதாக கூறுகிறார்,  அது  கடவுளுக்கு தான் தெரியும்” என அஜித் கூறியுள்ளார்.


அஜித்துக்கு பணம் கொடுத்த செக் நம்பர் இப்போது என்னிடம் உள்ளது. இதற்கு அஜித் என்ன சொல்லப் போகிறார். தன்னை ஜென்டில்மேன் என காட்டி கொள்ளும் அஜித், பணம் வாங்கியது தொடர்பாக பேசி இருக்க வேண்டும் அல்லது பணத்தை தரமாட்டேன் என்று கூறி இருக்க வேண்டும்.


யாரையும் நேரில் சந்திக்காமல் ஒளிந்து வாழ்ந்து வரும் அஜித், அவரை தூக்கி விட்ட தயாரிப்பாளர்களை மறந்து நன்றி கெட்டு நடந்து கொள்கிறார். நேருக்கு நேராக வந்து பேசத் தயங்கும் அஜித், ஆர்டிஸ்டை பார்க்கவே அச்சப்படுகிறார்“ என அஜித் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.  இறுதியாக , “ முடிஞ்சா மனுஷனா இருங்கடா...”என்று கூறி தனது பேட்டியை மாணிக்கம் நாராயணன் முடித்து கொண்டார். 


தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் அஜித் நடிக்க இருப்பதால் அதற்கான அப்டேட் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படும் நிலையில், அஜித் குறித்த குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் முன் வைத்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.