நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகிய படம் வலிமை. கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இரண்டரை ஆண்டுகள் படப்பிடிப்பில் இருந்த இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. எச்.வினோத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு யூ டியூப் விமர்சகர்கள் பலரும் கலவையான விமர்சனங்கள் அளித்தபோதிலும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் வலிமை பிளாக்பஸ்டர் ஹிட்டாக உருவெடுத்தது. இதனால், வலிமை படம் ரூபாய் 200 கோடி வசூலைக் கடந்தும் 25வது நாளாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.




வலிமை படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூரும், ஜூ ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த நிலையில், வலிமை திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் எப்போது வெளியாகும் என்று இன்று அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வலிமை திரைப்படம் வரும் 25-ந் தேதி முதல் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






இந்த அறிவிப்பை ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது. வலிமை அறிவிப்பை முன்னிட்டு சென்னையின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான நந்தனம் மைதானத்தில் 10 ஆயிரம் சதுர அடி அளவிலான வலிமை படத்தின் பிரம்மாண்ட பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரைச் சுற்றிலும் அஜித் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.




வலிமை படத்தின் ஓடிடி அறிவிப்பை ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அருமையான சமூக கருத்துடன் வெளியாகிய வலிமை திரைப்படம் பல சோதனைகளை கடந்து திரைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு யுவன்சங்கர்ராஜா மற்றும் ஜிப்ரான் இருவரும் இசையமைத்திருந்தனர். படத்தில் இடம்பெற்றிருந்த ஸ்டண்ட் மற்றும் பைக் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருந்தது.


வலிமை படத்தின் 25ம் நாளான இன்று வலிமையின் ஓடிடி அறிவிப்பு வெளியாகியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே எச்.வினோத் படத்திற்காக அஜித்தின் புதிய கெட்டப் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த புதிய அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண