சேலம் டவுன் மேட்டு அக்ரகாரம் தெருவில் கடந்த 14 ஆம் தேதி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவர் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பதும் டவுன் பகுதியில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.



இதை தொடர்ந்து சிசிடிவி கேமரா பதிவுகளை டவுன் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சுரேஷ் இறந்து கிடந்த இடத்தின் அருகே அவர் ஓடுவதும் வாலிபர் ஒருவர் ஆட்டோவில் விரட்டி செல்வது போன்ற பதிவு சிக்கியுள்ளது. பின்னர் தீவிர விசாரணை நடத்தியதில் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் நான்தான் சுரேஷை கொலை செய்தது என்று ஒப்புக்கொண்டார். சுரேஷ் மீது ஆட்டோவை ஏற்றியும் தலையில் கல்லை தூக்கிப் போட்டும் கொலை செய்ததாக மணிகண்டன் ஒப்புக்கொண்டார். 


இதையடுத்து கொலை பற்றி மணிகண்டன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான ஓமலூர் அம்பேத்கர் காலனியில் மனைவி புகழ் மொழியோடு வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பொம்மை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அருகில் இருந்த தேனீர் கடையில் சுரேஷ் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு கடைக்கு அடிக்கடி சென்று வந்த நிலையில் புகழ் மொழிக்கும், சுரேஷ் குமாருக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை தெரிந்த மணிகண்டன் அவரது மனைவியை கண்டித்துள்ளார். மேலும் சுரேஷ்யும் தாக்கி எனது மனைவியுடன் பேசக்கூடாது என்று கண்டித்துள்ளார்.



இதையடுத்து சுரேஷ் சேலம் மாநகரப் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றிற்கு மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மணிகண்டன் தனது மனைவியுடன் சேலம் சிவதாபுரம் பனங்காடு பகுதியில் குடிபெயர்ந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் டவுன் பகுதிக்கு ஆட்டோவில் வந்தபோது சாலை ஓரமாக சுரேஷ் படுத்திருந்ததை பார்த்து உள்ளார். அவரை பார்த்ததும் ஆத்திரம் அடைந்துள்ளார். கடந்த 13 ஆம் தேதி மணிகண்டன் இரவு மது மற்றும் கஞ்சா போதையில் சேலம் டவுன் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது சாலையோரம் படுத்திருந்த சுரேசை பார்த்ததும் ஆத்திரத்தில் அருகே கிடந்த கட்டையால் கடுமையாக தாக்கியும் ஆட்டோவில் விரட்டி சென்று அவர் மீது மோதி கீழே விழுந்த நிலையில் தலையில் கல்லை தூக்கிப் போட்டு சுரேசை கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் கைதான மணிகண்டனை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.