சக நடிகரை கேலி செய்ததால் அவரது மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை நடிகர் அஜய் தேவ்கன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜய் தேவ்கன் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தேசிய விருது, பிலிம்பேர் விருது, பத்ம ஸ்ரீ விருது என பல விருதுகளை வென்றுள்ளார். 1991 ஆம் ஆண்டு நடிக்க தொடங்கிய அஜய் தேவ்கன் தொடர்ந்து 33 ஆண்டுகளாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட அவர் நடித்த ஷைத்தான் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
சில நேரங்களில் நம்மை சுற்றி இருப்பவர்களை மகிழ்விக்கிறோம் என்ற பெயரில் நாம் செய்யும் கேலி, கிண்டல் பேச்சுக்கள் எதிரில் இருப்பவர்களை தற்கொலை செய்யும் அளவுக்கு கொண்டு சென்று விடும். அப்படி ஒரு சம்பவம் தான் அஜய் தேவ்கன் வாழ்க்கையில் நடைபெற்றுள்ளது.
அதாவது, சில வருடங்களுக்கு முன் ஒரு நடிகர் திருமணம் செய்துக் கொண்டு தனது மனைவியை வெளியூரில் நடந்த ஷூட்டிங்கிற்கு அழைத்து வந்தார். அந்த பெண் சினிமாத்துறைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவர். அவர் ஒரு சிறிய நகரத்தில் இருந்து வந்தவர். அந்த படத்தின் ஷூட்டிங் இரவில் நடந்தது. அதனால் பகல் பொழுதில் புதுமண தம்பதிகள் வெளியே செல்வது போன்ற விஷயங்கள் எல்லாம் இருந்தது.
ஒருநாள் நான் அப்பெண்ணிடம், “உன் கணவருக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும், நாங்கள் இரவு நேரத்தில் எல்லாம் ஷூட்டிங் நடத்துவதில்லை. நான் இரவு 10.30 மணிக்கெல்லாம் ஷூட்டிங் முடித்து விட்டு ஹோட்டல் ரூமுக்கு வந்து விடுவோம்” என தெரிவித்தேன். நான் முதலில் தெரிவித்ததை அப்பெண் நம்பவே இல்லை. தன்னுடைய கணவரை பற்றி நான் கேலி செய்கிறேன் என அப்பெண் நினைத்திருந்தார்.
ஒருநாள், இரண்டு நாள் இல்லை, கிட்டதட்ட 8 நாட்களாக நான் இதே வார்த்தையை திரும்ப திரும்ப சொன்னேன். ஆனால் 9வது நாள் அப்பெண் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயன்றிருந்தார். என்னிடம் கணவனை நம்புகிறேன், இப்படி கேலி செய்யாதீர்கள் என சொன்ன பெண் ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்திருந்தார் என்பதை யோசித்தபோது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு தான், கணவருக்கும், அப்பெண்ணுக்கும் இடையே பிரச்சினை இருப்பது தெரிய வந்தது” என அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார்.