Narendra Modi: கச்சத்தீவு விவகாரத்தில் திமுக - காங்கிரஸின் இரட்டை நிலைப்பாடு அம்பலமாகியுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி டிவீட்:
கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு எப்படி விட்டுக் கொடுத்தது என்பது தொடர்பாக, ஆங்கில நாளேடு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை குறிப்பிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ பேச்சு வார்த்தைகள் ஒருபுறமிருக்க, தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு குறித்து வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக அம்பலப்படுத்தியுள்ளன. காங்கிரசும் திமுகவும் குடும்ப கட்சிகள். அவர்கள் தங்கள் சொந்த மகன்கள் மற்றும் மகள்கள் உயர வேண்டும் என்று மட்டுமே கவலைப்படுகிறார்கள். அவர்கள் வேறு யாரையும் பொருட்படுத்துவதில்லை. கச்சத்தீவு மீதான அவர்களின் அடாவடித்தனம், குறிப்பாக நமது ஏழை மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதி - இந்திரா காந்தி சந்திப்பு:
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு கிடைத்த பதில்களை ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளது. அதில், ”நாடாளுமன்றத்தில் கச்சத்தீவை விட்டுக்கொடுப்பது தொடர்பான விவாதத்தின் போது, திமுக எம்.பி., செழியன் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். ஆனால், இந்த விவாதத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே, அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்துள்ளார். அப்போது, கச்சத்தீவை விட்டுக்கொடுக்க கருணாநிதி சம்மதம் தெரிவித்தார். ஆனால், வெளிப்படையாக எங்களால் இதற்கு ஆதரவு தெரிவிக்க முடியாது. முடிந்தவரையில் இந்த விவகாரம் பெரிதாக வெடிக்காமல் இருப்பதற்கான ஆதரவு வழங்கப்படும் என கருணாநிதி தெரிவித்தார்.
அவரது நிலைப்பாட்டை அப்போதைய வெளியுறவுச் செயலாளர் பாராட்டியதோடு, மத்திய அரசை சங்கடப்படுத்தவோ அல்லது இந்த விவகாரத்தை மத்திய-மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினையாக மாற்றவோ எதுவும் செய்யக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். அந்த சூழலில் கச்சத்தீவை விட்டுக் கொடுக்கும் விவகாரம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்து இருந்தது. எதிர்க்கட்சிகளுக்கு கூட தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஒரு கட்டத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கலாம் என கருணாநிதி முயன்றார், ஆனால் வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்தலால் அது கைவிடப்பட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.