நடிகர் தனுஷூம் ஐஸ்வர்யாவும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தங்களது 18 வருட திருமண பந்தத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்த தனுஷூம், ஐஸ்வர்யாவும் தங்களது சமூக வலைதளங்களில் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தனர். அந்தப்பதிவில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.


இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். 






இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து பேசிய தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜா, இது சாதரண குடும்ப சண்டைதான் என்றும் இது தற்காலிக பிரிவுதான் என்றும் கூறியிருந்தார். அதனைத்தொடர்ந்து இருவரையும் சேர்த்து வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்பட்டது. பொதுவாக தங்களது விவாகரத்து முடிவை அறிவிக்கும் பிரபலங்கள், உடனே தங்களது பெயருக்கு பின்னால் உள்ள, பிரிந்த உறவின் பெயரை நீக்கி விடுவதோடு, பிரிந்து உறவுடன் இருந்த புகைப்படங்கள் நீக்கி விடுவர். 




ஆனால் ஐஸ்வர்யா தனுஷ் ஆரம்பம் முதலே, தனது பெயருக்கு பின்னால் இருந்த தனுஷின் பெயரை நீக்கவில்லை. இந்த நிலையில் முதன் முறையாக ஐஸ்வர்யா தனது பெயருக்கு பின்னால் இருந்த தனது கணவர் தனுஷின் பெயரை நீக்கியிருக்கிறார்.  எங்கு என்று கேட்கிறீர்களா.. ஐஸ்வர்யா  புதிதாக இயக்கியிருக்கும் Musafir ஆல்பத்தில் இதை செய்திருக்கிறார்.