ஒற்றை நபர் மீது மட்டும் கொட்டிக்குவிப்பது அல்ல அன்பு எனக் கூறியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் 18 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இவர்கள் கூட்டாக தங்கள் பிரிவை ட்விட்டரில் அறிவித்தனர். போன ஆண்டு இறுதியில் சமந்தா, நாக சைதன்யா என்றால் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐஸ்வர்யா, தனுஷ். இந்தத் தகவல் சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடிகர் ரஜினிகாந்தும் தனிப்பட்ட முறையில் மிகவும் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் ஐஸ்வர்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
2022 தொடங்கியதிலிருந்து மன உளைச்சல், உடற் பிணி என்று பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்.
தனது மனநிலை குறித்து நாளிதழ் ஒன்றுக்கு மனம் திறந்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தப் புதிய பயணத்தில் என்னை நானே கண்டுகொள்ள முயற்சித்து வருகிறேன். நான் நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன். இந்த வாழ்க்கைப் பாடத்தை இன்னும் ஆழமாகக் கற்க எனக்கு நிறைய தனிமை தேவைப்படுகிறது. 40 வயதாகிறது இப்போது வாழ்க்கையில் அன்புக்கு அர்த்தம் கேட்டீர்கள் என்றால், அன்பு என்பது ஒரு பொதுப்படையான உணர்வு என்பேன். அன்பை ஒரே ஒரு நபர் மீது கொட்டிக் குவிப்பதில் அர்த்தமில்லை. நான் வளரவளர அன்பின் மீதான எனது புரிதலும் வளர்கிறது. மீண்டும் நேசிக்கத் தயாரா எனக் கேட்கிறீர்கள். நான் இப்போது எனது தந்தையை நேசிக்கிறேன். எனது தாயை நேசிக்கிறேன். எனது பிள்ளைகளை நேசிக்கிறேன். அதனால் நேசம் ஒரு நபர், ஒரு பொருள், ஒரு வேலை எனக் கட்டுப்பாட்டு எல்லைக்குள் இருக்கக்கூடாது. நான் நிறைய நேசிக்கிறேன். இப்போது எனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கொரு நல்ல டீம் இருக்கிறது. அவர்கள் எனக்கு நல்ல உறுதுணையாக இருக்கின்றனர். கொரோனாவிலிருந்து மீள்வது கடினமாகவே இருந்தது.
இவ்வாறு அவர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
பிரிவை அறிவித்த ஐஸ்வர்யா, தனுஷ்..
முன்னதாக ஐஸ்வர்யாவும், தனுஷும் வெளியிட்ட அறிவிப்பில், “18 ஆண்டுக்காலமாக நல்ல நண்பர்களாக, கணவன் மனைவியாக, பெற்றோர்களாக ஒன்றாக பயணித்து வந்துள்ளோம். இந்த பயணம் முழுவதிலும், வளர்ச்சி, புரிதல், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்திருக்கிறோம். ஆனால், இன்று இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. நானும் ஐஸ்வர்யாவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவரையும் புரிந்து கொண்டு, இதில் இருந்து இருவரும் மீண்டு வருவதற்கான கால அவகாசத்தை அனைவரும் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். எங்களுடைய முடிவை ஏற்று எங்களது தனிமையை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்திருந்தனர்.