ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடர்ந்து பின்னர் மிகவும் பிரபலமான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் வெற்றியாளராக வாகை சூடிய பின்னர் சினிமாவில் அடியெடுத்து வைத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வெளி மாநிலங்களை சேர்ந்த வெள்ளைச் சருமம் கொண்ட நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவில் முன்னணி வகிக்கும் நிலையில், ஒரு தமிழ் பெண்ணாக, நிலத்தின் நிறத்தில் இருந்தும் பாகுபாடுகளைக் கடந்து அவர்களுக்கு டஃப் கொடுத்து எந்த கதாபாத்திரம் என்றாலும் என்னால் சிறப்பாக நடிக்க முடியும் என சாதித்து முன்னணி வகிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் 33வது பிறந்தநாள் இன்று. ஹேப்பி பர்த்டே ஐஸ்வர்யா !!!



நிறம் சார்ந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி :


ஏராளமான திறமைகள் இருந்தும் நிறம் என்ற ஒரே காரணத்தால் நமது நாட்டில் வாய்ப்புகள் கிடைக்காமல் முடங்கிப்போன பல பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருந்து இந்த நிறம் சார்ந்த அரசியலை முடிவுக்கு கொண்டுவந்தவர் என்ற பெருமை ஐஸ்வர்யா ராஜேஷையே சேரும். கனா போன்ற இளம் பெண்ணின் கனவுகளை லட்சியங்களை அடையும் ஒரு பெண்ணாகவும் நடிக்க முடியும் அதே சமயத்தில் ஒரு இளம் நடிகையாக இருந்தாலும் பலரும் நடிக்க தயங்கும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தவர்.







நிராகரிக்கப்பட்ட பெண்ணின் பயணம் :


மூன்று ஆண் குழந்தைகளை பெற்ற பெற்றோரின் கடுமையான வேண்டுதலின் வரமாக கிடைத்த கடைக்குட்டி தேவதையான ஐஸ்வர்யா  ராஜேஷ் அனைவருக்கும் செல்ல குட்டி. இதுவும் ஆண் குழந்தையாக  பிறந்து விடுமோ என்ற அச்சத்தால் கருக்கலைப்பு செய்ய கூட நினைத்தார்களாம். பல கடுமையான சூழலை எதிர்கொண்டு இந்த உலகத்தில் பிறந்த இந்த சிசு ஒரு திரை குடும்பத்தின் வாரிசு. தாத்தா, அப்பா, அத்தை, அண்ணன் என அனைவருமே நடிகர்கள். திரை குடும்பத்தின் வாரிசாக இருப்பினும் வாய்ப்புகள் அவர் கையில் தானாக வரவில்லை அதற்கு காரணம் நிறம். துணை வேடங்களில் கூட வாய்ப்பு கொடுக்க முடியாது என நிராகரிக்கப்பட்டவர்தான் இன்று அனைத்து தடைகளையும் தாண்டி சிறந்த நடிகையாக விளங்குகிறார். ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். 






திரைப்பயணத்தில் ஒரு  திருப்புமுனை :


ஐஸ்வர்யா ராஜேஷின் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாய் அமைந்த திரைப்படம் 'காக்கா முட்டை'. அதனை தொடர்ந்து அவர் எடுத்து வைத்த அடி அனைத்துமே வெற்றிதான். எல்லோருக்கும் கனவு காண உரிமையுள்ளது ஆனால் அது கனவாகவே ஆகிவிட கூடாது. எத்தனை தடங்கல்கள், எதிர்ப்புகள் வந்தாலும் முட்டி மோதி அவரவரின் கனவுகளை நனவாக்கி ஜெயிக்க விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், தைரியமும் மிக மிக முக்கியம். அப்படி ஒரு தன்னம்பிக்கை சின்னமாக இன்றைய இளம் பெண்கள் பலருக்கும் ரோல் மாடலாக திகழ்ந்து வரும் இந்த அற்புத பெண்மணிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.