இந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகை ஐஸ்வர்யாராய். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமாகிய அபிஷேக் பச்சனை திருமணம் செய்து மும்பையில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் தான் சொந்தமாக வாங்கிய நிலத்திற்கு முறையாக அரசுக்கு வரி செலுத்தாத காரணத்தால் அவருக்கு அந்த மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மகாராஷ்ட்ராவின் நாஷிக் மாவட்டத்தில் அத்வாடி அருகே உள்ளது சின்னர் தாலுகாவிற்கு உட்பட்ட தங்கோன் கிராமம். இந்த கிராமத்தில்தான் நடிகை ஐஸ்வர்யாராய் தனக்கு சொந்தமாக சுமார் ஒரு ஹெக்டேருக்கும் மேற்பட்ட நிலத்தை வாங்கியுள்ளார். அதற்கு வரியாக சுமார் ரூபாய் 21 ஆயிரத்து 960 செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், ஐஸ்வர்யா ராய் அந்த வரியை அரசுக்கு முறையாக செலுத்தவில்லை.
நிலம் வாங்கியதற்கான வரியை செலுத்த பல முறை ஐஸ்வர்யா ராய்க்கு அதுதொடர்பான துறை நினைவூட்டியது. ஆனால், ஐஸ்வர்யா ராய் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், சின்னர் தாலுகாவின் தாசில்தார் ஐஸ்வர்யா ராய்க்கு தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 10 நாட்களுக்குள் வரிப்பணத்தை முழுவதும் செலுத்தாவிட்டால் மகாராஷ்ட்ரா நில வருவா்ச்சட்டம் 1996ன் கீழ் ஐஸ்வர்யா ராய் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் கடந்த 9-ந் தேதியே ஐஸ்வர்யாராய்க்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சின்னார் தாலுகாவில் ஐஸ்வர்யாராய் உள்பட 1200 சொத்து உரிமையாளர்கள் முறையாக வரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. பல கோடி ரூபாய் சம்பளமாக வாங்கும் ஐஸ்வர்யாராய் சுமார் 22 ஆயிரம் வரியாக செலுத்தாததற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட்டில் கொடி கட்டிப்பறக்கும் ஐஸ்வர்யாராய் கடந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தமிழில் வெளியான ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: AK 62: சில்லா சில்லா....ஷூட்டிங்கே தொடங்கல...ஏகே 62 பட டிஜிட்டல் உரிமையை கூலாக கைப்பற்றிய நெட்ஃப்ளிக்ஸ்!
மேலும் படிக்க: உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியல்… நான்காவது இடத்தில் ஷாருக்! ஜாக்கி சானை முந்திய பிரபலம் யார்?