பாலா, சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் இணைந்த பிரபல நடிகை!
அபிநயா எஸ் அருள்குமார் | 19 Oct 2021 01:39 PM (IST)
எட்டு வருடங்களுக்குப் பிறகு அதர்வா முரளியும் பாலாவும் மீண்டும் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்திருக்கின்றனர்.
பாலா_சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பதில் மட்டுமல்லாது தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சரியான கதைகளை தேர்வு செய்து நடிப்பது மட்டுமல்லாமல், அறிமுக இயக்குநராக இருந்தாலும் பரவாயில்லை கதைக்களம் வலிமையான இருந்தால் போதும் என பல படங்களை தயாரித்தும் வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் உள்ளிட்ட படங்கள் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இறுதியாக வெளியான உடன்பிறப்பே திரைப்படமும் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் பாலா இயக்கத்தில் புதிய படத்தை சூர்யா தயாரிக்கவுள்ளார் என்ற செய்தி , சில மாதங்களாக உலா வந்துக்கொண்டிருந்த நிலையில் , சமீபத்துல் இந்த கூட்டணி இணைவது உறுதியானது.
பாலா - சூர்யா கூட்டணியில் வெளியான 'நந்தா', 'பிதாமகன்' உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சூர்யாவின் திரையுலக பயணத்தை நந்தாவிற்கு முன், நந்தாவிற்கு பின் என பிரிக்கலாம். அந்த அளவுக்கு சூர்யாவின் சினிமா கெரியரில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படம் நந்தா. அதன் காரணமாத்தானோ என்னவோ சூர்யா , இயக்குநர் பாலா மீது மிகுந்த மரியாதையுடன் நடந்துக்கொள்வாராம். பாலா இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் நாச்சியார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்தில் சூர்யாவின் மனைவி ஜோதிகா மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி பலரின் பாராட்டை பெற்றார். இயக்குநர் பாலா நடிகர் , நடிகைகளை கதைக்கு ஏற்ற மாதிரியாக நடிக்க வைப்பதில் கில்லாடி.
சூர்யா தயாரிப்பில் பாலா இயக்கும் புதிய படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைப்பெற்று வரும் சூழலில், படத்தில் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கதாநாயகனாக நடிகர் அதர்வா முரளி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலா இயக்கத்தில் அதர்வா, பரதேசி என்னும் படத்தில் நடித்திருந்தார்.‘எரியும் பனிக்காடு’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் வேதிகா, ரித்விகா என பல நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் எட்டு வருடங்களுக்குப் பிறகு அதர்வா முரளியும் பாலாவும் மீண்டும் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்திருக்கின்றனர். நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது அடுத்தடுத்த முக்கிய நடிகர்கள் மற்றும் நடிகைகளை தேர்வு செய்யும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. பாலா , சூர்யா கூட்டணியின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் சூர்யாவும் கெஸ்ட் ரோலில் நடிப்பார் என கூறப்படுகிறது.