”அட என்னய்யா இந்த மனுஷன் இப்படி இருக்காரு" என பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இயல்பான நடிப்பு, எளிமையான தோற்றம் என நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்துக்கொண்டே செல்கிறார். இது ஒரு புறம் இருக்க அவரின் அர்த்தம் மிகுந்த பேச்சிற்காகவே, தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. விஜய் சேதுபதி தற்போது கமல்ஹாசன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் மாஸ் வில்லனாக  நடித்து வருகிறார். இது குறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த விஜய் சேதுபதி “ நான் இந்த படத்துல நடிக்க ஒப்புக்கொண்டதே கமல் சாருக்காகத்தான். கமல் சார் ஒரு சிறந்த நடிகர் அவர் கூட மேடைய பகிர்ந்துக்கிறது எனக்கு கிடைத்த வாய்ப்பு ” என குறிப்பிட்டுள்ளார். 





விஜய் சேதுபதி தற்போது மாஸ்டர் செஃப் என்ற குக்கிங் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றிலும்  தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது . இந்த நிகழ்சியில் தொகுப்பாளராக களமிறங்க இயக்குநர் விக்னேஷ் சிவன்தான் காரணமாம் . அவர் பரிந்துரை செய்ததன் அடிப்படையில்தான்  விஜய் சேதுபதி மாஸ்டர் செஃப் குழுவினரை சந்திக்க ஒப்புக்கொண்டாராம். அவர்கள் நிகழ்ச்சி குறித்து விளக்கியதும் பச்சைக்கொடி காட்டி விட்டாராம் விஜய் சேதிபதி. இதை அவரே தெரிவித்துள்ளார். மேலும் சேதுபதி தனக்கென ஒரு பாணி உள்ளதாக கூறுகிறார். "ஒரு விஷயம் பிடிச்சா உடனே செய்துவிடுவேன், பிடிக்கலன்னா கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் செய்ய மாட்டேன்” என்பதுதான் அது.





விஜய் சேதுபதி தற்போது  26 படங்களை தமிழ், தெலுங்கு , மலையாளம், இந்தி என கைவசம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது” நடித்தால் ஹீரோதான்” என்றில்லாமல் கதைக்கு பொருத்தமான , பவர்ஃபுல்லான வேடங்கள் கிடைத்தால் உடனே ஓகே சொல்லிவிடுவாராம். கதை தேர்வுகளில் விஜய் சேதுபதியை அடித்துக்கொள்ள யாரும் இல்லை என்பதுதான் கோலிவுட் டாக்.


தனது கதாபாத்திரம் நடிப்பை வெளிப்படுத்துவதற்கான களமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணம்.  முன்னணி நடிகர்களான கமல், விஜய் ஆகியோருக்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதியிடன் “எப்போ அஜித்துக்கு வில்லனா நடிக்க போறீங்க?” என கேட்க, அதற்கு அவரோ “ எனக்கு ஈகோ கிடையாதுங்க அதுனால அஜித்தோட 10 படங்கள் வேணும்னாலும் வில்லனா நடிப்பேன்” என பளார் பதில் கொடுத்துள்ளார். ஏற்கனவே டஜன் கணக்கில் படங்கள் , நிகழ்ச்சி தொகுப்பாளர் என செம பிஸியாக இருக்கும்  விஜய் சேதுபதியை தெலுங்கு திரைத்துறை இயக்குநர்கள் தங்கள் படங்களில் நடிக்கை வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அதில் கவனம்செலுத்த அவருக்கு நேரம் இருக்குமா என்பதுதான் ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.