கடந்த ஆண்டு விஜயின் கில்லி திரைப்படம் திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆகி வசூல் ரீதியாக பெரியளவில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தற்போது குஷி திரைப்படம் ரீரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தின் வசூலை பெரிதும் சார்ந்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் 

Continues below advertisement

குஷி ரீரிலீஸ்

எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் குஷி . ஜோதிகா , விவேக் , மும்தாஜ் , விஜயகுமார் , ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். தற்போது 24 ஆண்டுகளுக்குப் பின்  வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி மீண்டும் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. கடந்த ஆண்டு விஜயின் கில்லி திரைப்படம் உலகம் முழுவதும் ரீரிலீஸ் ஆகி மிகப்பெரிய வசூல் வெற்றிபெற்றது. உலகளவில் இப்படம் ரூ 35 கோடி வரை வசூல் செய்து படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னமுக்கு பெரியளவில் கைகொடுத்தது. இந்த வசூலை வைத்தே  தற்போது செல்வராகவன் இயக்கிவரும் 7 ஜி ரெயின்போ காலணி படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்தது.  அந்த வகையில் தற்போது குஷி திரைப்படத்தின் வசூலை பெரியளவில் நம்பியிருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் 

Continues below advertisement

பவன் கல்யாண் படத்தால் நொடிந்து போன ஏ.எம் ரத்னம் 

இந்தியன், நட்புக்காக, காதலர் தினம், குஷி, ரன், தூள், கில்லி, சிவகாசி, ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் போன்ற பல வெற்றி படங்களை தயாரித்தவர் ஏ. எம். ரத்னம். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் அவர் தயாரித்து, டப்பிங் செய்து வெளியிட்ட பல படங்களும் வசூலில் பெரும் வெற்றி பெற்றன. ஆனால் பங்காரம், ஆக்ஸிஜன், கருப்பன் போன்ற அவரது சில படங்கள் வசூலில் தோல்வியடைந்ததால், அவர் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்தார். இத்தனை நெருக்கடியின் மத்தியிலும்  பவன் கல்யாண் நடித்து கடந்த ஜூலை மாதம் வெளியான ஹரி ஹர வீர மல்லு படத்தை ரூ 300 கோடி பட்ஜெட்டில் தயாரித்தார். இப்படத்தின் வெற்றி தனது கடன் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்று அவர் நம்பியிருந்த நிலையில் வசூலில் சொதப்பியது ஹரிஹர வீர மல்லு. இதனால் கடும் கடன் பிரச்சனையால் அவதிபட்டு வருகிறார் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் 

கைகொடுக்குமா குஷி ?

தற்போது குஷி திரைப்படத்தை உலகம் முழுவதும் ரீரிலீஸ் செய்யவிருக்கிறார் ஏ.எம் ரத்னம் . கில்லி படத்தைப் போலவே குஷி படமும் பெரியளவில் வசூல் ஈட்டினால் அது தனது கடன் பிரச்சனையை தீர்க்கும் என நம்பியிருக்கிறார். அடுத்தபடியாக சிவகாசி படத்தையும் ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்.