மலையாள சூப்பர் ஸ்டார்ஸ் அழைக்கப்படும் மம்முட்டிக்கும் மோகன்லாலுக்கு ஐக்கிய அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி கௌவுரவப்படுத்தியுள்ளது. மலையாள திரையுலகினருக்கு கோல்டன் விசா அங்கீகாரம் கிடைப்பது இதுவே முதல் முறை. இந்த விசாவை பிரபல லூலூ குரூப் சேர்மன் எம்.ஏ.யூசப் அலி ஏற்பாடுகள் செய்திருந்தார். இவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். புலம்பெயர் தொழிலதிபரான இவர் அமீரகத்தில் பெரும் செல்வாக்கை பெற்றவர். அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத்துறை தலைவர் முகமது அலி அல் ஷோராப் அல் ஹம்மாதி மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோருக்கு கோல்டன் விசாவை வழங்கினார். 







விசாவை பெற்றுக்கொண்ட மோகன்லால் “ இந்த விசா எங்களுக்கு கிடைக்க பெரிதும் உதவிய  எம்.ஏ.யூசப் அலி அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். இதை நாங்கள் மிகப்பெரிய மரியாதையாக கருதுகிறோம்.” என்றார். இது குறித்து ட்வீட் செய்துள்ள நடிகர்  மம்முட்டி “ இந்த விசா கிடைக்க உதவியாக இருந்த எனது சகோதரர் யூசுஃப் அலிக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் ஐக்கிய அமீரக அரசிற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்  “ என குறிப்பிடுள்ளார். இந்த அங்கீகாரத்தை நடிகர்களின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.







குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்குபவர்கள் மற்றும் திறமையானவர்களையும் ஈர்க்கும் பொருட்டு ஐக்கிய அமீரகத்தால் கொண்டுவரப்பட்டதுதான் கோல்டன் விசா. 10 வருட ஐக்கிய அரபு நாடுகளில் தங்கி பணியாற்றும் ஒரு சிறப்புமிக்க விசா தான் இந்தக் கோல்டன் விசா. இதனை வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் அந்நாட்டு குடிமக்கள் போலவே கருதப்படுவார்கள் .10 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தால் மட்டுமே போதுமானது. முன்னதாக இந்தியாவில் ஷாருக்கான், சஞ்சை தத் ஆகியோருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கியது.விளையாட்டுத் துறையை பொருத்தவரை சானியா மிர்சாவுக்கு மட்டும் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.