30 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, பழைய பாலிவுட் வசீகரம் காஷ்மீரில் மீண்டும் தொடங்கியுள்ளது, முதன்முறையாக, ஸ்ரீநகரில் புதிதாகத் திறக்கப்பட்ட ஐனாக்ஸ் சினிமா,  தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு 14 ஷோக்களில் 12 ஷோக்கள் ஹவுஸ்ஃபுல் ஆக இருந்தது. அந்த திரையரங்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் படம் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  






14 காட்சிகள்:


14 காட்சிகள் (புதன் மற்றும் வியாழன் இரண்டு நாட்களில் தலா 7 காட்சிகள்) திரையிடப்பட்டதாக INOX மல்டிபிளக்ஸ் உரிமையாளர் விஜய் தர் தெரிவித்தார். மேலும் அரங்குகளில் அனைத்து இருக்கைகளும் ஆக்கிரமிக்கப்பட்டதால் நேற்று நடந்த ஏழு காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாக இருந்தன, என கூறினார். ஜனவரி 26ஆம் தேதி விடுமுறை நாள் என்பதால் கூட்டம் சற்று குறைவாக இருந்தது.  


ஸ்ரீநகரின் சோன்வார் பகுதியில் காஷ்மீரின் முதல் மல்டிபிளக்ஸ் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவால் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் காஷ்மீரில் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.


வசூலை குவிக்கும் பதான்:


2019ம் ஆண்டு வெளியான 'வார்' திரைப்படம் 50 கோடியும், 2022ம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் 52 கோடியையும் வசூல் செய்தது. அந்த வகையில் இந்தி பாக்ஸ் ஆபிஸில் 51 கோடி வசூல் செய்ததோடு பதான் திரைப்படம் சர்வதேச அளவில் முதல் நாள் மட்டுமே 100 கோடி வசூல் செய்து ஒரு அற்புதமான ஓப்பனிங் பெற்றுள்ளது. விடுமுறை அல்லாத தினத்தில் வெளியாகி 2017ம் ஆண்டு வெளியான பாகுபலி 2வின்  இந்தி வெர்ஷன் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது பதான். 


யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பதான்”. ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் ரிலீசுக்கு முன்பே பல சர்ச்சைகளில் சிக்கியது.   


பாலிவுட் மகிழ்ச்சி:


ஒட்டுமொத்த பாலிவுட் சினிமாவும் கடந்த 2 ஆண்டுகளாக இறங்குமுகத்தில் பயணித்த நிலையில், பாலிவுட்டின் பாட்ஷாவாகக் கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கானின் படம் மூலம் பாலிவுட் தற்போது மீண்டெழுந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.


2018ஆம் ஆண்டு வெளியான ’ஜீரோ’ படத்தின் வணிக ரீதியான தோல்வி ஏற்படுத்திய பாதிப்பில்,  இருந்த ஷாருக்கான்  சிறிது காலம் இடைவெளி எடுத்து படங்களை பார்த்துப் பார்த்து தேர்வு செய்து வந்தார்.