நடிகை அதிதி சங்கர் மாவீரன் படப்பாடலுக்கு நடனமாடி பகிர்ந்துள்ள வீடியோ லைக்ஸ் அள்ளி வருகிறது.


இயக்குநர் முத்தையா இயக்கிய விருமன் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி ஜோடியாக அறிமுகமானவர் இயக்குநர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி. எம்பிபிஎஸ் படித்து முடித்துள்ள அதிதி சங்கர், தன் படிப்பை முடித்த கையுடன் நடிப்பின் மீது தான் கொண்டுள்ள காதலால் சினிமா பக்கம் கியரை மாற்றி நடிகையாக அறிமுகமானார்.


நடிப்பு தாண்டி இசையிலும் ஆர்வம் கொண்ட அதிதி டோலிவுட், கோலிவுட் என தொடர்ந்து பாடல்கள் பாடியும் வருகிறார். அந்த  வகையில் ஏற்கெனவே தமன் இசையில் டோலிவுட்டில் ஒரு பாடல், தன் முதல் படமான விருமன் படத்தில் மதுர வீரன்  பாடல் ஆகியவற்றைப் பாடி பிரபலமடைந்துள்ளார்.


அந்த வகையில் தற்போது மாவீரன் படத்தில் இடம்பெற்றுள்ள வண்ணாரப்பேட்டையில் எனும் பாடலை சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பாடியுள்ளார் அதிதி.


இந்தப் பாடல் சென்ற வாரம் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. இந்நிலையில், தற்போது தான் பாடிய பாடலுக்கு தானே நடனமாடி வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். துறுதுறு பெண்ணான அதிதி க்யூட்டாக நடனமாடும் இந்த வீடியோ இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது.


 






முன்னதாக இதேபோல் இன்ஸ்டா ட்ரெண்டிங்கில் இருந்த ‘மால டம் டம்’ பாடலுக்கு அதிதி நடனமாடி வீடியோ பகிர்ந்த நிலையில், இந்த வீடியோ இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வைரலானது குறிப்பிடத்தக்கது.


மண்டேலா படத்தின் மூலம் பிரபலமான மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் -  அதிதி சங்கர் ஜோடி முதன்முறையாக இணைந்துள்ள திரைப்படம் மாவீரன். இசையமைப்பாளர் பாரதி சங்கர் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், இரண்டாம் பாடலான ‘வண்ணாரப்பேட்டையில..’ பாடல்  சென்ற வாரம் வெளியானது.


பெப்பியாகவும், காதல் பாடலாகவும் உருவாகியுள்ள இப்படம், சிவகார்த்திகேயன் - அதிதி இருவருமே இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். சென்ற பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் முதல் சிங்கிளான சீனா சீனா எனும் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.


வரும் ஜுலை 14ஆம் தேதி மாவீரன் திரைப்படம் திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மிஷ்கின், நடிகை சரிதா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.