கர்நாடக மாநில அரசின் மேகதாது அணை கட்ட முயற்சியின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர், கர்நாடகா காவிரி உரிமை மறுப்பதால் தமிழ்நாட்டில் 12 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாலைவனமாகி விட்டதாகவும், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போல் ஒன்றிய பாஜக அரசு செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டு உரிமைகளை காலில் போட்டு மிதிப்பதில் கர்நாடக அரசு தெளிவாக உள்ளதாகவும், இது தொடர்பாக எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, இபிஎஸ், ஓபிஎஸ் என பலரும் ஒன்றிய அரசிடம் நம் உரிமைகளை முன்வைத்தும் பலனில்லை என்ற அவர், காங்கிரஸ், பாஜக என தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் எந்த கட்சியாக இருந்தாலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிர்க்கும் என்று கூறினார். 



தொடர்ந்து பேசுகையில், தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்க துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதி காப்பது ஏன் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பிய வேல்முருகன், மயிலே மயிலே என்றால் இறகு போடாது எனவும், அதிகாரம் தன்னிடம் இருந்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைத்திருப்பேன் எனவும் சாடினார். மேலும் அமைச்சர் செந்தில்பாலாஜி ஊழல் செய்யவில்லை என்று வாதாடவில்லை என்ற அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை கைது செய்ய உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றார். தமிழக மக்களின் வாழ்வுரிமைக்காக போராடிவரும் தன்னை பாஜகவில் இணைந்தால் மத்திய அமைச்சர் பதவி தருகிறோம் என பாஜக சிவப்பு கம்பளம் விரித்ததாகவும், சிறு சமரசம் செய்திருந்தால் திமுக, அதிமுகவில் அமைச்சராகியிருப்பேன். ஆனால் இன உரிமைக்காக சமரசம் இன்றி போராடி வருகிறேன் என்றும் தெரிவித்தார். ராமதாஸை எதிர்த்து வாழப்பாடி ராமமூர்த்தி, தீரன், ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரால் கட்சி நடத்த முடியவில்லை என்று கூறிய வேல்முருகன் ராமதாஸை எதிர்த்து 12 ஆண்டுகாலம் கட்சி நடத்தி வருபவன் நான் என்றார். 



முன்னதாக, தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறையினர் தொடர்ச்சியாக இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது காவல்துறையினர் ஒரு பக்கமாக கூட்டத்தை நடத்த சாலையில் தடுப்புகள் அமைத்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூட்டம் நடக்கும் இடத்தின் அருகில் வருகை தரும் செய்தி அறிந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து பேசிய வேல்முருகன், ”காவல்துறையினருக்கு சட்டமன்றத்தில் தொடர்ச்சியாக குரல் கொடுப்பவன் நான். காவல்துறையினரின் மானிய கோரிக்கையின் போது காவல்துறையினருக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தேன். என்னை காவல்துறையினர் பகைத்துக் கொள்ளாதீர்கள். ஒரு கூட்டம் நடத்துவதற்கு பல்வேறு இடையூறுகளை காவல்துறையினர் செய்து வருகிறீர்கள். இதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். வேல்முருகன் யார் என்பதை உங்களின் உயர் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்” என்று காவல்துறையினரை எச்சரித்தார்.