விருமன் இசைவெளியீட்டு விழா நேற்று மதுரையில் நடந்த நிலையில், அதில் ஹீரோயினாக அறிமுகமான இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, பெரிதும் கவனிக்கப்பட்டார். அவரது பேச்சும் கவனிக்கப்பட்டது. அதை விட, அவர் பேசும் போது, அவரது தந்தை ஷங்கரின் ரியாக்ஷன் பெரிதும் கவனிக்கப்பட்டது. இதோ அவரது பேச்சும், ஷங்கரின் ரியாக்ஷனும்...




 


‛‛என்னோட ஆசை கனவு எல்லாமே, அங்கே இருந்து இங்கே வரணும்னு தான். அதுக்கு ஆதரவு அளித்ததற்காக என் அப்பா, அம்மா, சகோதரர், சகோதரி , நண்பர்களுக்கு நன்றி. இந்த கனவை நிறைவேற்றிய சூர்யா சார், ஜோதிகா மேம், ராஜா(இணை தயாரிப்பாளர்) ஆகியோருக்கு நன்றி. தேசிய விருது பெற்ற சூர்யா சாருக்கு இந்த சமயத்தில் வாழ்த்துக்கள் கூறிக் கொள்கிறேன்.


எங்கள் இயக்குனர் முத்தையா சாருக்கு ரொம்ப நன்றி, என்னை தேன்மொழியா மாற்றியதற்காக, நம்பி எனக்கு இந்த ரோல் கொடுத்ததுக்காக நன்றி சார். அவர் அவ்வளவு சின்சியர். சூட்டிங் ஸ்பாட்டில் சீன் சொல்ல வரும் போதே அதில் வாழ்வார். அவர் சீன் சொல்லும் போதே, கண் கலங்கும். அவருக்கு ரொம்ப ரொம்ப நன்றி.


யுவன்ராஜா சாரோடு பெரிய பெரிய ரசிகை நான். என்னோட அறிமுகப்படுத்துல அவர் இசையமைத்தது , அவரோட முதல் பாடல் பாடியிருக்கிறேன். எல்லோருக்கும் அந்த பாடல் பிடிக்கும். என்னை இப்படி ஸ்கிரினில் பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கு, அதற்கு ஒளிப்பதிவாளர் செல்வா சார் தான் காரணம். அவருக்கும் நன்றி. எல்லாருக்கும் நன்றி. யாரையாவது மறந்திருந்தா ரொம்ப ஸாரி.


(உடனே கீழே அமர்ந்திருந்த இயக்குனர் சங்கர் குறுக்கிட்டு, கார்த்தி கார்த்தி என்று தன் மகளை அலர்ட் செய்தார். உடனே சமாளித்த அதிதி, தந்தை கொடுத்த கிண்ட்ஸை வைத்து பேச்சை தொடர்ந்தார் )




எப்படி மறக்க முடியுாம், ஹீரோ சார். எனக்கு அவ்வளவு சப்பொர்ட் பண்ணார். என்னை அறிமுக நாயகியாக அவர் பார்க்கவில்லை. என்னை ரொம்ப நல்லா பார்த்துட்டாரு. அவரை மறக்கவே முடியாது; அவருக்கு ரொம்ப ரொம்ப நன்றி. சூட்டிங் போகும் வரை எனக்கு பயம் இருந்தது. ஆனால் என்னோட ராசி, பாடலுடன் சூட்டிங் ஆரம்பித்தது. அதுக்கு எனக்கு ஜாலியா இருந்தது. கஞ்சாப்பூ கண்ணால பாடல் தான், முதல் சூட். ஷோபி மாஸ்டர் தான் எடுத்தாரு. எனக்கு முதல் அனுபவமே ஜாலியா போயிடுச்சு. 


எனக்கு படத்தில் நடிக்க எந்த அழுத்தமும் இல்லை. அம்மா, அப்பா தெரிந்து தான் என்னை இங்கு அனுப்பினார்கள். இங்கு கிடைக்கும் வெற்றி, என்னால் நடந்ததாக இருக்க வேண்டும், என் அப்பாவால் இல்லை,’’ என்று அவர் பேசினார். 






இதே போல், மகள் அதிதி பேசும் போதெல்லாம், கீழே இருந்து கூர்ந்து கவனித்த இயக்குனர் ஷங்கர், அதற்கு பல விதமான ரியாக்ஷன் கொடுத்துக் கொண்டே இருந்தார். அதே போல், அவரது தாயாரும், மகிழ்ச்சியோடு தன் மகள் உரையாடுவதையும், பாடுவதையும், ஆடுவதையும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்.