ஆதிபுருஷ் படத்தின் வசனங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அதனை எழுதிய மனோஜ் முன்டாஷிர் சுக்லா மீண்டும் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
வால்மீகி எழுதிய ராமாயணத்தின் ஒரு பகுதியை அடிப்படையாக கொண்டு கடந்த ஜூன் 16 ஆம் தேதி 3டி தொழில் நுட்பத்தில் வெளியான படம் ‘ஆதிபுருஷ்’. ஒரே நேரத்தில் இந்தி,தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியான இப்படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன், லட்சுமணனாக சன்னி சிங், ஹனுமனாக தேவ்தட்டா நாக் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான ஆதிபுருஷ் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
முன்னதாக படத்தின் டீசர், ட்ரெய்லரின் போது கிராபிக்ஸ் காட்சிகள் கிண்டல் செய்யப்பட்டது. வீடியோ கேமில் வருவதை விட மோசமாக இருப்பதாக சொல்லப்பட்டதால் படக்குழு போட்ட பட்ஜெட்டை விட கூடுதலாக கிராபிக்ஸ் காட்சிகளை மேம்படுத்த ரூ.100 கோடி செலவிட்டது. ஆனாலும் படம் ரசிகர்களை கவரவில்லை. முதல் 3 நாட்கள் மக்கள் தியேட்டருக்கு சென்று ஆதிபுருஷ் படத்தை பார்த்தாலும், வெளியே வரும் போது எதிர்மறையான விமர்சனங்களையே முன்வைத்தனர்.
அதேசமயம் படத்தில் இடம் பெற்ற வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து வசனங்களை மாற்ற படக்குழு முடிவெடுத்தது. சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து கொலை மிரட்டல்களும் வந்ததால் ஆதிபுருஷ் படத்திற்கு வசனம் எழுதிய மனோஜ் முன்டாஷிர் சுக்லா வீட்டுக்கு மும்பை காவல்துறை பாதுகாப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இப்படியான நிலையில் மனோஜ் முன்டாஷிர் சுக்லா மீண்டும் சர்ச்சையான கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் ஒரு பேட்டியில், ‘ஹனுமான் கடவுள் அல்ல, அவர் ஒரு பக்தர் மட்டுமே. அவர் ராமரைப் போல தத்துவ ரீதியாகப் பேசியதில்லை. மேலும் ராமர் மேல் இருந்த பக்திக்கும், அதன் சக்திக்கும் தான் ஹனுமனை நாம் கடவுளாக ஆக்கியுள்ளோம்’ என தெரிவித்துள்ளார். இது பலரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே ஆதிபுருஷ் படத்தின் மீது நெகட்டிவ் விமர்சனங்கள் பரவி வரும் நிலையில், மனோஜின் இந்த கருத்து இணையத்தில் கடும் எதிர்ப்புகளைப் பெற்றுள்ளது.