நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஆதிபுருஷ்’ படத்தின் டீசரை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
பாலிவுட்டில் வெளியான 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார்.
ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்களான சயீஃப் அலி கான் மற்றும் சன்னி சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பாகுபலிக்கு பிறகு வெளியான ‘சாஹோ’ மற்றும் ‘ராதே ஷ்யாம்’ ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் இந்தப்படத்தின் வாயிலாக வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்று கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார் பிரபாஸ்.
ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப்படத்தின் டீசர் நேற்று உத்திரபிரதேச மாநிலம் அயோத்தி நதிக்கரையில் மிக பிரமாண்டமாக வெளியிடப்பட்டது.
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற முழக்கத்துடன் வெளியான டீசரில் பிரபாஸ் ராமராகவும், சயீஃப் அலி கான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். டீசரில் விஎஃப் எக்ஸ் காட்சிகள் தத்ரூபமாக வந்திருந்தாலும் படம் குழந்தைகளுக்கான படம் போல இருப்பதாக ரசிகர்கள் டீசரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
500 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகியிருக்கும் இந்தப்படம் 3டி ப்ளஸ் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கிறது. தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் இந்தப்படம் அடுத்த வருடம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.