'ஆதிபுருஷ்' திரைப்பட வசனங்கள் குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், பார்வையாளர்களுக்கு மதிப்பளித்து வசனங்களை மாற்றி அமைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
ராமராக பிரபாஸ்
பிரபல டோலிவுட் நடிகரான பிரபாஸ் பாகுபலி படத்தைத் தொடர்ந்து பான் இந்தியா நடிகராக உருவெடுத்து, தொடர்ந்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களைக் குறிவைத்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், நேற்று முன் தினம் (ஜூன்.16) வெளியான திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ வால்மீகி எழுதிய ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு 3டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படம், முதல் நாளே உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஆனால், படம் பற்றிய அறிவிப்பு, ஃபர்ஸ்ட் லுக் தொடங்கி பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் உழன்று கொண்டிருந்த இப்படம் இணையவாசிகள் மத்தியில் அதிகப்படியான ட்ரோல்களை சந்தித்தது. மேலும் நேற்று திரைப்படம் வெளியானது முதலே, மீம் க்ரியேட்டர்கள் உற்சாகமாகி படத்தை ட்ரோல் கண்டெண்ட்டாக மாற்றி இணையதளவாசிகள் ரகளை செய்து வருகின்றனர்.
சர்ச்சையான வசனம்
மேலும் திரைப்ப்படத்தில் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மாற்றங்களும் சில தரப்பினர் மத்தியில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக படத்தில் ஹனுமன், ராவணன் பற்றி பேசும் சில வசனங்கள் இந்தி ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. மேலும் படத்தின் வசனகர்த்தாவை நெட்டிசன்கள் பலரும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கினர்.
இந்நிலையில் மக்களின் உணர்வுகளுக்கு பதிலளித்து இந்த வசனங்களில் மாற்றம் செய்வதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. முன்னதாக தன் ட்விட்டர் பக்கத்தில் ஆதிபுருஷ் திரைப்படத்தின் இணை எழுத்தாளரான மனோஜ் முண்டஷிர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நான் பாராட்டை எதிர்பார்த்தேன்
"ராம கதையில் இருந்து ஒருவர் கற்றுக் கொள்ளும் முதல் பாடம், ஒவ்வொரு உணர்ச்சிக்கும் மதிப்பளிப்பது. காலப்போக்கில் சரியோ தவறோ மாறுகிறது நான் ஆதிபுருஷ் படத்தில் 4000 வரிகளுக்கு மேல் எழுதினேன், ஐந்து வரிகளில் சிலரது உணர்வுகள் புண்பட்டன. நூற்றுக்கணக்கான வரிகளில், ஸ்ரீ ராமர் போற்றப்பட்டார். சீதையின் கற்பு விவரிக்கப்பட்டது, நான் பாராட்டை எதிர்பார்த்தேன், ஆனால் எனக்கு ஏன் அது கிடைக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.
எனது சொந்த சகோதரர்கள் சமூக வலைதளங்களில் எனக்கெதிராக அநாகரீகமான வார்த்தைகளை எழுதினர். என் தாயைப் பற்றி அவதூறாக எழுதினார்கள்.ஒவ்வொரு தாயையும் தனது தாயாகக் கருதும் ஸ்ரீ ராமரை மறந்து இப்படி பேசும் அளவுக்கு என் சகோதரர்களுக்கு எங்கே திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டது?
ஏன் இப்படி திட்டுகிறீர்கள்..
மூன்று மணி நேரப் படத்தில் உங்கள் கற்பனைக்கு மாறான ஒன்றை மூன்று நிமிடம் நான் எழுதியிருக்கலாம், ஆனால் என் நெற்றியில் ஜென்ம துரோகி என்று எழுத ஏன் அவசரப்பட்டீர்கள் என்று என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஜெய் ஸ்ரீராம் பாடலை நீங்கள் கேட்டதில்லையா, சிவோஹம் அல்லது ராம் சியா ராம் என்ற வார்த்தைகளைக் கேட்கவில்லையா?
இவற்றையும் நான் தான் எழுதினேன். உங்கள் மீது எனக்கு எந்த புகாரும் இல்லை. நாம் ஒருவரையொருவர் எதிர்த்து நின்றால் சனாதனம் தோற்றுவிடும். சனாதன் சேவைக்காக நாங்கள் ஆதிபுருஷ் செய்துள்ளோம், அதை நீங்கள் அதிக எண்ணிக்கையில் பார்க்கிறீர்கள், எதிர்காலத்திலும் நீங்கள் பார்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
உணர்வுகளுக்கு மதிப்பு
ஏன் இந்தப் பதிவு என்றால், எனக்கு உங்கள் உணர்வுகளை விடப் பெரியது எதுவும் இல்லை. என் வசனங்களுக்கு ஆதரவாக எண்ணற்ற வாதங்களை என்னால் கொடுக்க முடியும், ஆனால் இவை லியைக் குறைக்காது. உங்களைப் புண்படுத்தும் சில வசங்களை திருத்த நானும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரும் இணைந்து முடிவு செய்துள்ளோம். அவற்றை இந்த வாரம் படத்தில் சேர்ப்போம். உங்கள் அனைவருக்கும் ஸ்ரீ ராமர் அருள் புரியட்டும்!” எனப் பதிவிட்டுள்ளார்.
ஓம் ராவத் இயக்கியுள்ள 'ஆதி புருஷ்' திரைப்படத்தில் பிரபாஸ் உடன் கிருத்தி சனோன், சன்னி சிங் ,சயீஃப் அலி கான், தேவதத்தா நாகே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.