ஆதிபுருஷ் திரைப்படம் இந்த வார வெள்ளிக்கிழமை (ஜூன் 16) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக க்ரித்தி சனோன், இராவணனாக சைஃப் அலி கான், ஹனுமனாக தேவதத்தா நாக் ஆகியோர் நடித்துள்னர்.


ஓம் ராவத் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், பிரபல மராத்திய இசையமைப்பாளர்களான அஜய் - அதுல் ஜோடி இசையமைத்துள்ளனர்.


இப்படத்தின் ஃஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதலே இப்படம் கடும் ட்ரோல்களை சம்பாதித்து வருகிறது. பிரபாஸ் ராமரைப் போல் தோற்றமளிக்கவில்லை என்றும், ராவணன் கதாபாத்திரத்துக்கும் சைஃப் அலி கானுக்கும் சம்பந்தமில்லை என்றும் ட்ரோல்கள் குவிந்த நிலையில், விமர்சனங்களைக் கடந்து,  படக்குழுவினர் 100 கோடிகளை படத்துக்கு ஒதுக்கி தங்கள் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.


இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில்  5 மொழிகளில்  3டி தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாகும் நிலையில்,  படக்குழுவினர் தீவிர ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 


அந்த வகையில் ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டரில் ஹனுமனுக்காக ஒரு சீட்டை காலியாக வைக்க வேண்டும் என தயாரிப்பாளர் மற்றும் விநியோகதஸ்களிடம்  இயக்குநர் ஓம் ராவத் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தார். இந்தச் சம்பவம் இணையத்தின் மிகப்பெரும் ட்ரோல் மெட்டீரியலாக மாறி மீம்களை வாரிக்குவித்தது.


இந்நிலையில் நடிகர்கள் ரன்பீர் கபூர், ராம் சரண் தொடங்கி தி காஷ்மீர் ஃபைல்ஸ் தயாரிப்பாளர் வரை இப்படத்தின் 10 ஆயிரம் டிக்கெட்டுகளை ஆதரவற்றவர்களுக்கு தானமாக வழங்குவதாக அதிரடி அறிவிப்பு வெளியிட்டனர்.


இந்நிலையில், படம் வெளியாகும் முன்பே உலகம் முழுவதும் ஆதிபுருஷ் படத்தின் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  பிரபாஸின் சொந்த ஊரான ஹைதராபாத்தில் டிக்கெட் புக்கிங் இன்னும் தொடங்காத நிலையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் இந்தி வட்டாரத்தில் மட்டும் முதல் வார இறுதியில் ஆதிபுருஷ் படம் 20 கோடிகள் வரை வசூலிக்கலாம் என படக்குழுவினரும், சினிமா வட்டாரத்தினரும் கணித்துள்ளனர்.


 700 கோடிகள் வரையிலான பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஆதிபுருஷ் திரைப்படம் திரையரங்குகளில் வசூலைக் குவித்தால் மட்டுமே வெற்றியடையும் எனும் சூழல் ஏற்பட்டுள்ளது.


முன்னதாக ஆதிபுருஷ் படத்தை ஓட வைப்பதற்காக இப்படியெல்லாம் படக்குழு ஸ்டண்ட் செய்து வருவதாகவும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர்.


மேலும், இதுபற்றி கடுமையாக விமர்சித்திருந்த தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், “ஆதிபுருஷ் திரைப்படத்துக்கு அனுமனுக்கு  10 சீட் கூட கொடுக்க ரெடியாகவே இருக்கிறோம்,  ஆனால் இந்தப் படம் தமிழ்நாட்டில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இருக்கப்போவதில்லை, தியேட்டருக்கு மக்களை வரவழைக்க மதத்தை இழுக்கிறார்கள்” என சாடியது குறிப்பிடத்தக்கது.