ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்கம் ஒன்றுக்கு குரங்கு ஒன்று வருகை தந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


ஆதிபுருஷ்:


ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், க்ரித்தி சனோன், சைஃப் அலி கான் ஆகியோர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இன்று (ஜூன்.16)இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக ஆதிபுருஷ் வெளியாகியுள்ளது.


இப்படத்துக்கு மகாராஷ்டிராவின் பிரபல இரட்டை இசையமைப்பாளர்களான அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதலே இணையவசிகளின் மீம் கண்டெண்ட்டாக மாற, ட்ரோல்கள், சர்ச்சைகள் எனக் களைக்கட்டி ஆதிபுருஷ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று ட்ரெண்டானது. 


ஹனுமனுக்கு சீட்:


முதலில் சுமார் 500 கோடிகள் செலவில் இப்படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், ட்ரோல்களை அடுத்து மேலும் 100 கோடிகள் ஒதுக்கி படக்குழு முழுவீச்சில் படப்பணிகளை மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியாகி மீண்டும் கலவையான விமர்சனங்களைப் பெற்று ஆதிபுருஷ் பேசுபொருளானது.


மேலும் சென்ற வாரம் திருப்பதியில் நடைபெற்ற ஆதிபுருஷ் ப்ரீ ரிலீஸ் விழாவில் இப்படத்தின் இயக்குநர் ஓம் ராவத், கடவுள் ஹனுமனுக்கு தியேட்டர்தோறும் ஒரு இருக்கை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தது நெட்டிசன்கள் மத்தியில் மேலும் ட்ரோல்களை சம்பாதித்தது.


தியேட்டருக்கு வந்த குரங்கு:


இந்நிலையில் படத்தை ஓட வைக்க ஆதிபுருஷ் படக்குழு தொடர்ந்து இதுபோன்ற முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக விமர்சனங்கள் குவிந்தன.


இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று ஆதிபுருஷ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்கம் ஒன்றுக்கு குரங்கு ஒன்று வருகை தந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


இது எந்த ஊர் திரையரங்கம் எனும் தகவல்கள் தெரியாத நிலையில், ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என முழுக்கமிட்டு குரங்கை வரவேற்கும் காட்சியும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.


 






மேலும் ராமர் வேடமேற்ற பிரபாஸை வரவேற்க ஹனுமனே குரங்கு வடிவில் வந்ததாகக் கூறி ஆதிபுருஷ் மற்றும் பிரபாஸ் ரசிகர்கள் இணையத்தில் வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.


மற்றொருபுறம், ஆதிபுருஷ் திரையரங்குகளில் இயக்குநர் கோரிக்கை வைத்தபடி கடவுள் ஹனுமனுக்கு சீட்டுகள் ஒதுக்கப்பட்டு ஹனுமன் சிலைகளை வைத்து  ரசிகர்கள் வழிபடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.


 






ஹனுமனாக நடிகர் தேவ்தத்தா நாக் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், அவரது கதாபாத்திரத்தின் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் சன்னி சிங், சோனால் சௌஹான் உள்ளிட்ட நடிகர்களும் ஆதிபுருஷ் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் பெற்றுள்ளது.


சென்ற 1992ஆம் ஆண்டு வெளியான ஜப்பானிய திரைப்படமான ‘ராமாயணம்: தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ்’ படத்தால் ஈர்க்கப்பட்ட  இயக்குநர் ஓம் ராவத், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ராமாயணம் எடுக்க விரும்பி ஆதிபுருஷ் படத்தை எடுத்துள்ளார்.  நடிகர் பிரபாஸூக்கு முன்னதாக வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய இரண்டு படங்களும் படுதோல்வியைத் தழுவிய நிலையில், ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றி பெறுமா என எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்துள்ளனர்.