THE FLASH REVIEW: ஆயிரம் கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டாலும், அடுத்தடுத்து நேர்ந்த சிக்கல், நாயகனாக நடித்த எஸ்ரா மில்லர் கைது, அடுத்தடுத்து ரி-ஷுட், படத்தை மொத்தமாக ஓரம்கட்டிவிடலாமா என தயாரிப்பு நிறுவனத்தின் ஆலோசனை, டிசியுவிற்கு புதுயுகம் பிறக்குமா? என ரசிகர்களின் ஏக்கம் என பல இன்னல்களுக்கு மத்தியில் ஒருவழியாக வெளியாகியுள்ளது ”தி பிளாஷ்” திரைப்படம்.
படத்தின் கதை:
2017ம் ஆண்டு வெளியான ஜஸ்டிஷ் லீக் படம் எங்கு முடிந்ததோ அங்கிருந்தே தொடங்குகிறது தி ஃபிளாஷ் திரைப்படம். தனது தாயை கொன்றதாக கைதாகியுள்ள தனது தந்தையை காப்பாற்ற உள்ள கடைசி வாய்ப்பை பயன்படுத்தி, அவரை விடுதைலை செய்ய நாயகன் பாரி ஆலன் போராடி வருகிறார். வேறு வழியே இல்லாமல் இறுதியாக தனது சக்தியை பயன்படுத்தி டைம் டிராவல் செய்து, கடந்த காலத்திற்கு சென்று தனது தாய் கொலை செய்யபடுவதை தடுக்கிறார்.
பின்பு அங்கிருந்து நிகழ்காலத்திற்கு செல்லும்போது பாதியிலேயே மாட்டிக்கொள்கிறார். இதையடுத்து, அங்கு தனது இளம் வயது பாரி ஆலன் வெர்ஷனை சந்திக்கிறார். அதோடு, அவர் செய்த மாற்றத்தால் உலகம் என்ன மாதிரியான பிரச்னைகளை சந்திக்கிறது. அதில் இருந்து உலகத்தை காப்பாற்ற என்ன மாதிரியான முயற்சிகளை மேற்கொள்கிறார். தனது பெற்றோரை காப்பாற்றினாரா, மீண்டும் நிகழ்காலத்திற்கு பாரி ஆலன் திரும்பினாரா என்பது தான் மீதிக்கதை.
பாஸிடிவ் பாயிண்ட்:
படத்தின் முக்கியமான பாஷிடிவ் என்பது, வழக்கமான டார்க் டோன் டிசி படமாக இல்லாமல், அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமான படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு பேட்-மேன் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டுமே கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பென் அஃப்ளெக் அட்டகாசமான அதிரடி காட்சிகளால் ரசிகர்களை திகைப்பூட்ட, பேட்மேன் எப்படி ஒரு கைதேர்ந்த டிடெக்டிவ் என்பதை விளக்கும் விதமாக மைக்கேல் கீட்டன் செயல்பட்டுள்ளார்.
எஸ்ரா மில்லரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், படத்தில் பாரி ஆலன் கதாபாத்திரத்தை சிறப்பாகவே நடித்து கொடுத்துள்ளார். சூப்பர் கேர்ள் கதாபாத்திரம் தேவையான அளவிற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ”தி ப்ளாஷ் பாயிண்ட்” எனும் காமிக் கதையை திரையில் பார்த்த ஒரு முழுமையான அனுபவத்தை ரசிகர்களால் உணர முடிகிறது. அதோடு, படத்தில் இடம்பெற்றுள்ள பல நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை சிரிப்பலையில் மூழ்கடிக்கச் செய்கிறது. (தமிழில் பார்ப்பது மேலும் சிறந்த அனுபவத்தை தரலாம்). கிளைமேக்ஸ் காட்சியில் மல்டிவெர்ஸ் கொலைடல் என்பதை மார்வெல் படங்களை காட்டிலும் சிறப்பாக காட்டியுள்ளது டிசி. படத்தின் இறுதியில் என்ன நடக்கும் என்பது டிசி கதைகளை தொடர்ந்து படித்தவர்களால் கணிக்க முடிந்தாலும், புதியதாக வரும் ரசிகர்களுக்கு ஒரு நல்ல சர்ப்ரைஸ் தான்.
சர்ப்ரைஸ்:
பல காலங்களாக டிசி ரசிகர்களாக இருப்பவர்களை குஷிப்படுத்தும் விதமாக பல கேமியோக்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக கிளைமேக்ஸ் சீனில் வரும் ஒரு குறிப்பிட்ட சூப்பர் மேன் கதாபாத்திரம் எல்லாம் யாரும் எதிர்பார்க்காதது தான். இதுவரை வெளியான அனைத்து டிசி திரைப்படங்களுமே, ஒரே குடையின் கீழ் தான் உள்ளது என்பதையும் ஒரே காட்சியின் மூலம் படம் விளக்கியுள்ளது. அதோடு, எதிர்கால டிசி படங்கள் எதைநோக்கி செல்லும் என்பதையும், கிளைமேக்ஸ் மூலம் காட்டியிருக்கிறார் இயக்குனர் ஆண்டி முஷெட்டி. மிட் கிரெடிட்ஸ் சீன் மூலம், ஒரு முக்கியமான சூப்பர் ஹீரோ தொடர்ந்து டிசி படங்களில் நீடிப்பர் என்பது உறுதியாகியுள்ளது. டிசி காமிக்ஸில் எப்போது ஒரு பெரிய பிரச்னை வந்தாலும் ஃப்ளாஷ் கதாபாத்திரத்தை கொண்டு தான், டைம் டிராவல் மூலம் அதனை தீர்த்து வைப்பர். அதே பாணியில் தற்போது ஆரம்பிக்கப்பட உள்ள புதிய டிசி யுனிவர்சிற்கான பாதையையும் ஃப்ளாஷ் கதாபாத்திரத்தை கொண்டே, அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.
குறைகள் என்ன?
படத்தின் மையக்கரு என்பது பாரி ஆலனுக்கும், அவரது தாய்க்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு தான். ஆனால், அது ரசிகர்கள் இடையே பெரிய அளவில் சென்று சேரவில்லை. கேப்டன் ஜாட் வில்லனாக கதைக்கு பெரும் வில்லனாக பயன்படவில்லை. இருப்பினும் கதையின் நகர்வில் முக்கிய பங்கு வகிக்கிறார். ஆங்காங்கே கிராபிக்ஸ் காட்சிகளில் பிசிறு தட்டுவதை உணர முடிகிறது. குறிப்பாக ஃப்ளாஷின் சூட் எதோ பெயிண்ட் அடித்ததை போன்று கண்களுக்கு தோன்றுகிறது. பின்னணி இசை பெரியளவில் ஈர்க்கவில்லை. ஆனால், சூப்பர் கேர்ள் சண்டையின்போது இடம்பெற்ற பிஜிஎம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
DCEU-வில் அடுத்து என்ன?
போன்களில் இருக்கும் ஃபேக்ட்ரி ரிசெட் என்பது போல தி ஃப்ளாஷ் திரைப்படம் டிசி யுனிவெர்சிற்கு அமைந்துள்ளது. இதையடுத்து, ஜேம்ஸ் கன் மேற்பார்வையில் டிசி திரையுலகம் காண இருக்கும் அனைத்து படங்களுக்குமே இந்த ஃப்ளாஷ் திரைப்படம் புதிய பாதையை அமைத்து கொடுத்துள்ளது. மார்வெல் நிறுவனம் அடுத்தடுத்து சுமாரான படங்களை கொடுத்து வரும் நிலையில், டிசி நிறுவனம் ஒரு தரமான படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளது.
ALSO READ | Adipurush Review: பிரபாஸின் அவதாரம் ஆதிபுருஷ்..! ரசிகர்களுக்கு சந்தோஷமா..? சங்கடமா..? இதோ விமர்சனம்..!