பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ஆதிபுருஷ் திரைப்படம் மிகப்பெரியத் தோல்வியை சந்தித்துள்ளது. ஆதிபுருஷ் திரைப்படத்துடன் சேர்த்து தொடர்ச்சியாக மூன்று தோல்விப் படங்களை கொடுத்து ஹாட்ரிக் அடித்துள்ளார் பிரபாஸ். இதனால் அவருக்கு தெலுங்கு சினிமாவில் இருக்கும் மார்கெட் எதுவும் பெரிதாக பாதிப்படையவில்லை என்றாலும் இந்தியில் அவரது மார்கெட் சரிந்துள்ளது. தற்போது பிரபாஸ் மூன்று மிகப்பெரியப் படங்களில் நடித்து வருகிறார்.


இந்த மூன்று படங்களுக்காக மொத்தம் 1100 கோடிகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. மீண்டும் ஒரு வெற்றிப் படம் கொடுத்து தனது மார்கெட்டை தக்க வைப்பாரா பிரபாஸ் என்கிற கேள்வி திரையுலகில் எழுந்துள்ளது.


பாகுபலி


பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள திரைப்படம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் பிரபாஸ். மேலும் பான் இந்தியா ஸ்டார் என்கிற அடையாளமும் அவருக்கு வழங்கப்பட்டது.


சாஹோ


இதனைத் தொடர்ந்து மிகப் பெரிய செலவில் பிரபாஸ் நடித்தத் திரைப்படம் சாஹோ. பாலிவுட்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான சாஹோ திரைப்படம் ரசிகர்களால் படுமோசமாக விமர்சிக்கப்பட்டது.


ராதே ஷியாம்


தொடர்ந்து தெலுங்கில் வெளியான ராதே ஷியாம் திரைப்படமும் தோல்வியடைந்தது. இது தொடர்பாக பிரபாஸிடம் கேள்வி எழுப்பப் பட்டபோது “ என்னை எல்லாப் படங்களிலும் பாகுபலியாகவே மக்கள் பார்க்க விரும்புகிறார்கள்” என்று பதில் அளித்தார் பிரபாஸ். ஆனால் பிரபாஸின் தொடர் தோல்விகளுக்கு காரணம் அவர் சுமாரான கதைகளை தேர்வு செய்வதே என்று விமர்சிக்கப்பட்டது.


ஆதிபுருஷ்


இரண்டு படங்களின் தோல்விக்குப் பிறகு கிட்டதட்ட 500 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வெளியானது ஆதிபுருஷ். வெளியான முதல் நாளில் இருந்தே படத்தின் தரம் குறித்த விமர்சனங்கள் எழுந்தன. மேலும் படத்தில் இடம்பெற்ற படங்களால் எழுந்த சர்ச்சை ஆகிய மொத்தமும் சேர்ந்துகொண்டது. ஆதிபுருஷ் படம் வெளியாகி 10 நாட்களுக்கும் அதிகமாகிவிட்ட நிலையில் 300 கோடி வசூலைகூட படம் தொடவில்லை. இந்தப் படத்துடன் பிரபாஸ் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்துள்ளார்.


பிரபாஸை காப்பாற்றுமா சலார்


தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பிரபாஸ் சுதாரித்து தனது அடுத்தப் படத்தை கே.ஜி.எஃப் படத்தை இயக்கிய பிரஷாந்த் நீலிடம் ஒப்படைத்தார். சுமார் 250  கோடி செலவில் உருவாகி வருகிறது சலார் படம் . சரிந்து போன பிரபாஸின் பாலிவுட் மார்கெட்டை மீண்டும்  சலார் படம் உயர்த்தும் என்று நம்பப்படுகிறது.


600 கோடி சுமை


சலார் திரைப்படத்தைத் தொடர்ந்து  பிரபாஸ் கையில் இருக்கும் மற்றோரு மிகப்பெரியப் படம் நாக் அஸ்வின் இயக்கும் ப்ராஜெக்ட் கே. 600 கோடி ரூபாய் செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனபே ஆதிபுருஷ் தோல்வியடைந்துள்ள நிலையில் இவ்வளவு பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் பிரபாஸுக்கு சுகமா சுமையா என்கிற கேள்வி எழாமல் இல்லை.


ஸ்பிரிட்


அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா பிரபாஸுடன் இணைய இருக்கும் படம் ஸ்பிரிட். இந்தப் படம் 250 கோடி செலவில் உருவாக திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்தத் தோல்விகளை சந்தித்து வரும் பிரபாஸைக் காப்பாற்றுமா இந்த மூன்று படங்கள் என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.