ஆதிபுருஷ் படத்திற்கு எதிர்மறையான கருத்துகள் வெளியாகியுள்ள நிலையில் அப்படத்தின் இயக்குநர் ஓம் ராவத் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 


வால்மீகி எழுதிய ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு  ’ஆதிபுருஷ்’ படம் எடுக்கப்பட்டுள்ளது.  இயக்குநர் ஓம் ராவத்  இயக்கியுள்ள இந்த படத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான், லட்சுமணனான சன்னி சிங் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜூன் 16 ஆம் தேதி இப்படம் வெளியானது. ஆனால் டீசர், ட்ரெய்லரைப் போல இந்த படம் ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களைப் பெற்றது. 


இதனிடையே ஆதிபுருஷ் படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மிகப்பெரிய அளவில் சாதனைப் படைத்து வருகிறது. முதல் நாளில் உலக அளவில் ரூ.140 கோடியும், 2வது நாளில் ரூ. 80 கோடி வரையிலும் வசூல் செய்துள்ளது. அதேசமயம் ஆதிபுருஷ் படம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் குறித்து ஓம் ராவத் பதிலளித்துள்ளார். 


இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், ”ஆதிபுருஷ் படம் வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே ரூ.200 கோடி தாண்டியுள்ளது நம்ப முடியாத அளவுக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது. தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழுக்கமிடுகின்றனர். இது பார்ப்பதற்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் ஒரு படம் பாக்ஸ் ஆபீஸில்  எந்த வகையான வரவேற்பைப் பெறுகிறது என்பது மிக முக்கியமானது. அந்த வகையில் ரூ.600 கோடி பட்ஜெட்டான ஆதிபுருஷ் படத்தின் வசூலானது மிகவும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளது” என தெரிவித்தார். 


அப்போது அவரிடம் ராமாயணக்கதையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து எழுந்த விமர்சனங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ராமாயணத்தை முழுமையாக புரிந்து கொள்ளும் திறன் யாருக்கும் இல்லை. நான் புரிந்துக் கொண்டதன் சிறுபகுதி தான் படமாக எடுக்க முயன்றேன். ராமாயணம் யாராலும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு பெரியது. ராமாயணம் புரியும் என்று சொன்னால் அவர்கள் முட்டாள்கள் அல்லது பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம். தொலைக்காட்சியில் பார்த்து வளர்ந்த ராமாயணத்தின் பதிப்பு தான் ஆதிபுருஷ் கதையை எடுக்க உதவியது’ ஓம் ராவத் தெரிவித்தார்.