1967ம் ஆண்டு இதே நாளில் (மே 26) 56 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான கிளாஸிக் திரில்லர் திரைப்படம் 'அதே கண்கள்'. இன்று வரை இப்படத்தை முறியடிக்க வேறு ஒரு திரில்லர் திரைப்படம் வெளியாகவில்லை என சொல்லும் அளவிற்கு ரசிகர்களை இருக்கையின் நுனியில் கட்டிவைத்த திரைப்படம். ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் ரவிச்சந்திரன் , காஞ்சனா மற்றும் பலரும் நடித்த இப்படம் காலத்தால் அழிக்க முடியாத கிளாஸிக் திகில் திரைப்படம். 


கிளாசிக் திகில் படம் :


படம் டைட்டில் கார்டு போடும் போதே இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை யாரிடம் சொல்ல கூடாது என நிபந்தனையுடன் படம் துவங்குகிறது. ஏனெனில் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்துவது அந்த காட்சி தான். படம் முழுக்க முகமூடி அணிந்து வரும் வில்லன் யார் என்பது தெரிந்துவிட்டால் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யம் குறைந்து விடும். கடைசியில் கொலைகாரன் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இவானா கொலைகாரன் என அனைவருமே ஆச்சரியப்படும் அளவிற்கு சிறிதும் பார்வையாளர்களுக்கு சந்தேகம் வராத அளவிற்கு அற்புதமான திரைக்கதை அமைத்து இருந்தார் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர். ஹாலிவுட் திகில் படங்களின் ரேஞ்சில் தமிழில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. 


 



கிளைமாக்ஸ் வரை குறையாத ஸ்வாரஸ்யம் : 


எஸ்.ஏ.அசோகன் குடும்பத்தை சேர்ந்த நான்கு சகோதரர்கள் ஒருவரின் பின் ஒருவராக மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த குடும்பத்தை சேர்ந்தவராக ஹீரோயின் காஞ்சனா நடித்திருந்தார். அவரின் காதலரான நடிகர் ரவிச்சந்திரன் கொலையாளியை கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை. ஒவ்வொரு கொலைக்கு பிறகும் இவர் தான் கொலைகாரர் என பார்வையாளர்கள் யூகிக்க அந்த நபரும் கொலை செய்யப்படும் போது சஸ்பென்ஸ் அதிகமாகி கொண்டே போகும். க்ளைமாக்ஸ் காட்சி வரை அப்படத்தின் கதையை எந்த இடத்திலும் சுவாரஸ்யம் குறையாமல் சஸ்பென்ஸாகவே நகர்த்தி இருப்பார் ஏ.சி திருலோகசந்தர். கொலைகாரனின் கண்கள் மட்டுமே ஒரே ஆதாரமாக இருக்க அதை வைத்து ஹீரோ ரவிச்சந்திரன் கிளைமாக்ஸ் காட்சியில் சந்தேகம் உள்ள ஒவ்வொருவரையும் வரிசையாக நிற்கவைத்து கண்களை உற்றுப்பார்த்தே கொலைகாரனை கண்டுபிடிக்கும் காட்சி சஸ்பென்ஸின் உச்சக்கட்டம்.   


 



சூப்பர் ஹிட் பாடல்கள் :


இந்தி படம் ஒன்றிற்காக படத்தின் பிரமாண்டமான செட்டை கலைக்க மனமில்லாத ஏ.வி.எம் நிறுவனம் அதே செட்டில் ஒரு சிறிய பட்ஜெட் படத்தை உருவாக்க திட்டமிட்டது. அப்படம் தான் அதே கண்கள். எஸ். மாருதிராவ் ஒளிப்பதிவு அபாரமாக இருந்தது. இசையமைப்பாளர் வேதாவின் இசையில் பொம்பளை ஒருத்தி இருந்தாளாம், எத்தனை அழகு, பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, வா அருகில் வா என படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தன.