குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீனா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த மீனா கடந்த 2009-ஆம் ஆண்டு பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
இதனிடையே நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 28-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகினர், ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வெளியே தலை காட்டாமல் இருந்த நடிகை மீனாவுக்கு ஆறுதலாக இருந்தனர் அவரது நண்பர் வட்டம்.
இரண்டாவது திருமணம் எனும் வதந்தி :
சமீபத்தில் நடிகை மீனாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு குடும்பத்தார் வற்புறுத்தியதாக தகவல் பரிமாறப்பட்டது. அதற்கு மீனா இந்த வதந்திகளை உண்மையல்ல என்பதை தெளிவுபடுத்தினார். கொஞ்சம் கொஞ்சமாக அந்த துயரத்தில் இருந்து மீண்ட மீனா இப்போது தான் சகஜ வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.
வைரலாகும் சங்கவி - மீனா நடனம் :
அதன் வெளிப்பாடாக மீனா தனது தோழியான நடிகை சங்கவியுடன் "மாலை டம் டம்..." பாடலுக்கு இணைந்து நளினமாக நடனமாடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்றைய ட்ரெண்டுடன் பயணிக்கிறேன் என கேப்ஷன் வைத்துள்ளார். நடிகர் விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்தவர் நடிகை சங்கவி. சமீபத்தில் மீனாவை நேரில் சென்று சந்தித்துள்ளார் நடிகை சங்கவி. தோழிகள் இருவரும் ஒன்றாக சேர்ந்த இந்த தருணத்தில் ஆடல் பாடலுடன் கொண்டாடியுள்ளனர். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த திரை ரசிகர்கள் சகஜ நிலைக்கு திரும்பும் மீனாவை பார்த்து சந்தோஷம் அடைந்துள்ளனர். சமீபத்தில் விளம்பரம் ஒன்றிலும் நடிகை மீனா நடிக்க இருப்பதாக தகவல்கள் பகிரப்பட்டன.