தமிழ்த்திரைப்படங்களில் கவுதம் கார்த்தி உள்பட பல நடிகர்களின் படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். இவர், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதன் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில், கடந்த மாதம் 24-ந் தேதி அதிகாலையில் சென்னை, மகாபலிபுரம் சாலையில்  நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் மகாபலிபுரத்தில் இருந்து சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.


காரை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்தார். அப்போது, மகாபலிபுரம் சாலையில் கார் வந்துகொண்டிருந்தபோது, அதிவேகத்தில் வந்த கார் யாஷிகாவின் கட்டுப்பாட்டை இழந்த சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி அந்த இடத்தில் விபத்துக்குள்ளாகியது.




இந்த விபத்தின் காரணமாக, காரில் யாஷிகா ஆனந்துடன் பயணம் செய்த அவரது நெருங்கிய தோழி வள்ளிபவனிசெட்டி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், உடல்நலம் தேறி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.


அதேசமயத்தில், அவர்மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்தனர். இந்த நிலையில், உடல்நலம் தேறிய யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்,




ஆனால், அவர் நேரடியாக அவரது வீட்டிற்கு திரும்பாமல் தனது தோழியின் வீட்டில் தங்கியுள்ளார். இதுதொடர்பாக, யாஷிகா ஆனந்த் கூறும்போது, தனக்கு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இப்போதுதான் ஓரளவு வலி குறைந்துள்ளது. எனது வீட்டிற்கு சென்றால் எனது தோழி பவனியின் ஞாபகம் வரும். அதனால்தான் எனக்கு தெரிந்த நர்ஸ் ஒருவரின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


நடிகை யாஷிகா ஆனந்த் நடிகர் ஜீவா நடித்த கவலை வேண்டாம் என்ற திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். பின்னர், கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான துருவங்கள் பதினாறு படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர், கவுதம் கார்த்திக்கின் இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.