தன்னுடைய சினிமா வாழ்க்கை எந்த படத்தின் மூலம் மாறியது என நடிகை விசித்ரா நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
1992 ஆம் ஆண்டு சோழா பொன்னுரங்கம் தயாரிப்பில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஆனந்த், நாசர், நெப்போலியன், விஜய், விசித்ரா என பலரும் நடித்த படம் “தலைவாசல்”.பால பாரதி இசையமைத்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த விஜய் தான் பின்னாளில் ரசிகர்களால் “தலைவாசல்” விஜய் என அழைக்கப்பட்டு வருகிறார். இந்த படம் விசித்ராவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை உண்டாக்கியது.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் தலைவாசல் விஜய், “தலைவாசல் படத்தில் பிளாக் அண்ட் ஒயிட் சாயலில் ஒரு பாடல் இருக்கும். நான் என் வீட்டு பெண்களை தவிர்த்து டான்ஸ் ஆடிய வெளியில் உள்ள பெண் என்றால் அது விசித்ரா தான். மேலும் அந்த படத்தில் பாலியல் தொழில் செய்யும் நபராக வருவார். ஆனால் மொத்த படத்தையும் பார்த்தாலும் எந்த கேரக்டரும் இவரை தொட்டோ, அல்லது இவர் யாரையும் தொட்டோ நடித்திருக்க மாட்டார். அந்த கேரக்டர் விசித்ராவில் சிறந்த சினிமா கேரக்டர்களில் ஒன்று” என கூறினார்.
தொடர்ந்து பேசிய விசித்ரா, “தலைவாசல் படத்தில் நான் நடிக்க எடுத்த முடிவு தான் திரையுலக வாழ்க்கையையே மாற்றியது. அந்த படம் முழுக்க நான் போர்த்திக் கொண்டு தான் நடித்தேன். ஆனால் என்னை கவர்ச்சி நடிகையாக மாற்றி விட்டது. என்னுடைய சினிமா பாதையே மாறி விட்டது. அதை உடைக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். நடக்கவே இல்லை. இருந்தாலும் எனக்கு கிடைத்த கேரக்டர்களை கொண்டு தயாரிப்பாளருக்கும், இயக்குநர்களுக்கும் எந்தவித பிரச்சினையும் வராமல் வேலை பார்த்து கொடுத்திருக்கேன். சவாலான ஒரு கேரக்டரை எடுத்து பண்ண வேண்டியிருந்தால் மக்கள் எப்படி எடுத்துப்பாங்கன்னு நினைச்சி பண்றதா அல்லது நமக்கு பிடிச்ச மாதிரி பண்றதா என தெரியவில்லை. இதை சரியாக கையாள்வது இயக்குநர் கையில் தான் உள்ளது" என தெரிவித்தார்.
சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட விசித்ரா, பின்னாளில் ஒரு சில படங்களில் காமெடி காட்சிகளிலும் அசத்தினார். மேலும் கடந்தாண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி போன்ற சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன் மீதான இமேஜை உடைத்தெறிந்தார். அதன்பின்னர் அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.