பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. 


நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, 2012 ஆம் ஆண்டு சிலம்பரசன் நடித்த  ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கணீர் குரல், அலட்டல் இல்லாத நடிப்பு என முதல் படமே அவருக்கு நல்ல எண்ட்ரீ ஆக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் ஹீரோயின்,வில்லன் என எந்த கேரக்டர் என்றாலும் அதில் நன்றாக நடிக்க வேண்டும் என்று மெனக்கெடல்  வரலட்சுமி இயக்குநர்களின் ஃபேவரைட் சாய்ஸில் மாறினார். 


போடா போடி படத்தை தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, மிஸ்டர் சந்திரமௌலி, எச்சரிக்கை, சண்டகோழி 2, சர்கார், மாரி 2, நீயா 2, வெல்வெட் நகரம், டேனி, கன்னி ராசி, இரவின் நிழல், பொய்க்கால் குதிரை, காட்டேரி, யசோதா, வி3, கன்னித்தீவு, கொன்றால் பாவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதில் சர்கார், சண்டகோழி 2 படங்களில் வில்லியாக  மிரட்டினார். இப்படியான நிலையில் சமீபத்தில் வரலட்சுமி நடிப்பில் “மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்” படம் வெளியானது. 






ஆஹா ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்தில், சந்தோஷ் பிரதாப், மஹத், இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இப்படியான நிலையில் வரலட்சுமி சமீபத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் நாளில் எல்லாம் கிரிக்கெட் மைதானத்திற்கு வருகை தந்திருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகத் தீவிர ரசிகையான அவர், இறுதிப்போட்டி நடைபெற்ற குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கும் சென்றிருந்தார். அதன் புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தும் இணையத்தில் வைரலாகியது. 


இந்த நிலையில் தற்போது வரலட்சுமி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “3 நாட்களை கடந்தும் இன்னும் நம்ப முடியவில்லை.. எல்லா இடங்களிலும் உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது.. நீண்ட இறுதிப் போட்டி.. ஆனால் மிக மிக மதிப்புமிக்கது. எல்லாம் ஒரே அணி மற்றும் ஒரே ஒருவருக்காக மட்டும் தான்.  சிறந்த தருணங்களை ஒரு ரீல் வீடியோவில் வைக்க முயற்சிக்கிறேன். மறக்க முடியாத அனுபவம்..!! வாழ்க்கையின் சிறந்த நினைவுகள்” என பதிவிட்டுள்ளார். 


கடந்த மே 29 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் சென்னை அணி குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதனை உலகம் முழுவதுமுள்ள சென்னை அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இன்றளவும் கொண்டாடி வருகின்றனர். போட்டியின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.