நாடு முழுவதும் சுமார் 660 மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. அதில் தமிழ்நாட்டில் மொத்தமாக 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) அனுமதியுடன் இயங்கி வருகின்றன. இந்நிலையில், தற்போது தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் இளநிலை படிப்புகளுக்கான அங்கீகாரத்தை இழக்க நேரிடுகிறது என்று கூறப்படுகிறது. அப்படி என்ன நடந்தது? இதில் தமிழ்நாடு என்ன செய்ய இருக்கிறது?
150 மருத்துவக் கல்லூரிகள்
தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதியுடன் அசாம், புதுச்சேரி, தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திர பிரதேசம், திரிபுரா, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளில் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சில குறைபாடுகளை சுட்டிக் காட்டி நாடு முழுவதும் சுமார் 40 கல்லூரிகள் அங்கீகாரத்தை இழந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, மருத்துவக் கல்லூரிகளிலுள்ள பயோமெட்ரிக் வருகைப் பதிவிலுள்ள குறைபாடுகள், போதிய சிசிடிவி கேமராக்கள் இல்லாதது, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களை சுட்டிக் காட்டி நாடு முழுவதும் சுமார் 40 கல்லூரிகளுக்கு இளங்கலை மருத்துவ வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஏற்கனவே 40 கல்லூரிகள் அங்கீகாரத்தை இழந்த நிலையில், மேலும் 150 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்க நேரிடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியலில் குஜராத், அசாம், புதுச்சேரி, தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நிலை என்ன?
தமிழ்நாட்டில் மொத்தம் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்தவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த 38 அரசு கல்லூரிகளில் 5,225 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவையில், மூன்று மருத்துவக் கல்லூரிகள் அதன் இளநிலை அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு கே.ஏ.பி விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு சேர்க்கை நடத்த முடியாது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த மூன்று கல்லூரிகளிலும் சுமார் 500 இடங்கள் வரை உள்ளன. ஆனால் தற்போது தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த முடிவால் அங்கீகாரம் இழப்பது மாணவர் சேர்க்கையை நடத்த முடியாத நிலையை உருவாகியுள்ளது.
மருத்துவக் கல்லூரி எண்ணிக்கை
மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, கடந்த 2014-ம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டில், நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. 2023-ல், எண்ணிக்கை 660 ஆக அதிகரித்துள்ளது. 2014-ல் 51,348 ஆக இருந்த இடங்களின் எண்ணிக்கை தற்போது 1,01,043 ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று, முதுநிலை பட்டப்படிப்பு இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மொத்தம் 65,335 முதுகலை இடங்கள் உள்ளன. 2014ல் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014-ல் 31,185 முதுகலை மருத்துவ இடங்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.