தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருக்கும் அவரின் முதல் மனைவி சாயாவுக்கும் பிறந்த மூத்த மகள் வரலட்சுமியும் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். வரலட்சுமி சரத்குமாரின் 39வது பிறந்தநாள் இன்று.  




சினிமா மீது இருந்த தீராத காதலால் மும்பைக்கு சென்று அனுபம் கெரின் ஆக்ட்டிங் ஸ்கூலில் பயிற்சி பெற்று தன்னுடைய நடிப்பு திறனை மென்மேலும் மெருகேற்றிக் கொண்டார். அதன் மூலம் அவருக்கு இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தில் லீட் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவரின் தந்தை சரத்குமார் மறுத்ததால் அந்த வாய்ப்பை நிராகரித்தார் வரலட்சுமி. அது போலவே காதல், சரோஜா உள்ளிட்ட படங்களின் வாய்ப்பையும் தவறவிட்டார். 


பல நல்ல வாய்ப்புகளை இழந்த பிறகு தான் இயக்குநராக விக்னேஷ் சிவன் அறிமுகமான 'போடா போடி' படத்தின் ஹீரோயினாக 2012ம் ஆண்டு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் வரலட்சுமி. முதல் படத்திலேயே அனைவரின் வரவேற்பையும் பெற்றவருக்கு தொடர்ச்சியாக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பல பட வாய்ப்புகள் கிடைத்தன. 


பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில்  நடித்து வந்த வரலட்சுமி திடீரென நெகட்டிவ் ரோல்களில் கவனம் செலுத்த துவங்கினார். மிரட்டலான, கொடூரமான வில்லியாக சிறப்பாக நடித்து தனது தனித்திறமையை நிரூபித்தார்.  


தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், சண்டக்கோழி 2 , மாரி 2 உள்ளிட்ட பல படங்களில் வரலட்சுமியின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது. ஹீரோயினாக இல்லை என்றாலும் தனக்கு கொடுக்கப்படும் கேரக்டர்களுக்கு நியாயம் செய்யும் வகையில் அவரின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது. கைவசம் பல மொழிகளில் பல படங்களில்  பிஸியாக நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார். 



வரலட்சுமியின் திருமணம் குறித்து பல கிசுகிசுக்கள் மிகவும் பரவலாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. ஆனால் அந்த வதந்திகளுக்கு எல்லாம் ஒரு ஃபுல்ஸ்டாப் வைக்கும் வகையில் தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். 


கடந்த மார்ச் 1ம் தேதி நடிகை வரலட்சுமி சரத்குமார், மும்பை தொழில் அதிபர் நிகோலய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக சத்தமே இல்லாமல் முடிந்துள்ளது.  இந்த அதிகாரபூர்வமான தகவலை நிச்சயதார்த்த புகைப்படங்களுடன் அறிவித்துள்ளார். இவர்களின் திருமண நாள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். 


தற்போது நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் 'ரயான்' படத்தில் நடித்து வருகிறார். இது தவிர வேறு சில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் வரலட்சுமி சரத்குமார். 


எத்தனையோ பிறந்தநாளை வரலட்சுமி கொண்டாடி இருந்தாலும் இந்த ஆண்டு அவருக்கு இது ஒரு ஸ்பெஷல் பிறந்தநாள். மணப்பெண்ணாக வரலட்சுமி  கொண்டாடும் இந்த பிறந்தநாளுக்கு அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.