பிரபல சீரியல் நடிகை வைஷாலி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.
'யே ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹை,சுஸ்ரால் சிமர் கா, சசுரல் சிமர் கா, சூப்பர் சிஸ்டர்ஸ், விஷ்யா அம்ரித், மன்மோகினி 2, ரக்ஷாபந்தன் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகை வைஷாலி தக்கர். 30 வயதான இவரை இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வரும் நிலையில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள்,வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது வழக்கம்.
இதனிடையே வைஷாலிக்கு அவரது காதலன் டாக்டர் அபிநந்தன் சிங்குடன் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்று ஜூன் மாதம் திருமணம் முடிவான நிலையில் அந்த உறவு முறிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளருடன் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி வைஷாலிக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தான் இந்தூரில் உள்ள தனது வீட்டில் அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவரது உடல் மீட்கப்பட்ட போது இடத்தில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றிய நிலையில் அதில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தில் ராகுல் என்ற நபரை குறிப்பிட்டுள்ள வைஷாலி, அவர் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். ராகுல் வைஷாலியின் முன்னாள் காதலர் என்றும், அவரின் பக்கத்து வீட்டுக்காரர் என சொல்லப்படும் நிலையில் ஓராண்டாகவே வைஷாலி - அபிநந்தன் திருமணம் தள்ளிப்போனது. அதற்கு காரணம் கொரோனா என கூறப்பட்டாலும் ராகுல் தான் உண்மையான காரணமாக இருந்துள்ளார். மேலும் தன்னுடன் வைஷாலி எடுத்த போட்டோ, வீடியோக்களை ராகுல் அபிநந்தனுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக இருவருக்குள்ளும் பிரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது நடக்கவுள்ள திருமணத்திற்கு ராகுல் இடைஞ்சலாக இருப்பாரோ என நினைத்த வைஷாலி இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும் ராகுலின் மனைவி திவ்யாவுக்கு நடந்த உண்மைகள் அனைத்தும் தெரியும். ஆனால் அவர் தன் கணவனை காப்பாற்றுவதற்காக என்னை பொதுவெளியில் திட்டினார். அதேசமயம் லவ் யூ அப்பா அம்மா நான் ஒரு நல்ல மகளாக இருக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். தயவு செய்து ராகுலையும் அவனது குடும்பத்தினரையும் தண்டிக்க வேண்டும். மனதளவில் ராகுலும், திஷாவும் இரண்டரை ஆண்டுகளாக என்னை சித்திரவதை செய்தனர். இல்லையெனில் என் ஆன்மா சாந்தி அடையாது என எழுதியுள்ளதோடு “I Quit” என எழுதியிருந்தார்.