டிஎன்பிஎஸ்சி போட்டித்‌ தேர்வுகளுக்கு மாநில அரசு சார்பில் இலவசமாகப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். 


இதுகுறித்து போட்டித்‌ தேர்வுகள்‌ பயிற்சி மையத்தின் தலைமைச்‌ செயலாளர்‌/ பயிற்சித்‌ துறைத் தலைவர் தெரிவித்துள்ளதாவது:


’’போட்டித்‌ தேர்வுகளில்‌ கலந்து கொள்ளும்‌ தேர்வர்களுக்கு தமிழக அரசின்‌ சார்பில்‌ சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, சர்‌ தியாகராயா கல்லூரி, நந்தனம்‌ அரசினர்‌ ஆடவர்‌ கலைக்‌ கல்லூரி ஆகிய இடங்களில்‌ இயங்கும்‌ போட்டித்‌ தேர்வுகள்‌ பயிற்சி மையங்களில்‌ கட்டணமில்லாப்‌ பயிற்சிகள்‌ வழங்கப்பட்டு வருகின்றன. 


அண்மையில்‌ நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத்துத்தேர்வுக்கு இந்த் பயிற்சி மையங்களில்‌ சிறந்த முறையில்‌ பயிற்சிகள்‌ வழங்கப்பட்டதன்‌ மூலம்‌ 440 தேர்வர்கள்‌ பயனடைந்துள்ளனர்‌. தற்போது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்‌ தேர்வாணையம்‌ நடத்தும்‌ இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌, இரண்டாம்‌ நிலை சிறைக் காவலர்‌, தீயணைப்பாளர்‌ ஆகிய பதவிகளுக்கான எழுத்துத்‌ தேர்வுக்கு, கட்டணமில்லா நோடி பயிற்சி வகுப்புகள்‌ இப்பயிற்சி மையங்களில்‌ வழங்கப்பட்டு வருகிறது.


தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌, குரூப் V- A-ல்‌ (தமிழ்நாடு தலைமைச்‌ செயலகப்‌ பணி) அடங்கிய உதவிப்‌ பிரிவு அலுவலர்‌/ உதவியாளர்‌ ஆகிய பதவிகளுக்கான 161 காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அமைச்சுப்‌ பணி/ தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில்‌ பணிபுரியும்‌ தகுதி வாய்ந்த உதவியாளர்‌ / இளநிலை உதவியாளர்களைக்‌ கொண்டு பணி மாறுதல்‌ மூலம்‌ நியமனம்‌ செய்வதற்கான எழுத்துத்‌ தேர்விற்கு இப்பயிற்சி மையங்களில்‌ பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 


விண்ணப்பிப்பது எப்படி?


மேற்படி, தேர்வுக்கு விண்ணப்பித்து, இப்பயிற்சியில்‌ பங்கேற்க விரும்பும்‌ தமிழ்நாடு அமைச்சுப்‌ பணி/ தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில்‌ பணிபுரியும்‌ தகுதி வாய்ந்த உதவியாளர்‌ / இளநிலை உதவியாளர்கள்‌ www.civilservicecoaching.com என்ற இணையத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்ய வேண்டும். தொடர்ந்து, விண்ணப்பத்தில்‌ குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன்‌ 26/10/2022 வரை நந்தனம்‌ அரசினர்‌ ஆடவர்‌ கலைக்‌ கல்லூரியில்‌ செயல்பட்டு வரும்‌ போட்டித்‌ தேர்வுகள்‌ பயிற்சி மைய அலுவலகத்தில்‌ நேரடியாகவோ அல்லது ceccnandanam@gmail.com என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கோ அனுப்பலாம்‌. 


பயிற்சி வகுப்புகள்‌ எப்போது?


மேற்படி தேர்விற்கான பயிற்சி வகுப்புகள்‌ 29/10/2022 சனிக்கிழமை முதல்‌ தொடங்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும்‌ சனிக்கிழமைதோறும்‌ நவம்பர்‌ மாதம்‌ வரை நடைபெறும்‌. மாதிரித்‌ தேர்வுகளும்‌ நடத்தப்படும்‌ என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌’’.


இவ்வாறு போட்டித்‌ தேர்வுகள்‌ பயிற்சி மையத்தின் தலைமைச்‌ செயலாளர்‌/ பயிற்சித்‌ துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.


மேலும்‌ விவரங்களுக்கு 9865808127,9894541118, 8667276684, 6381481895 ஆகிய அலைபேசி எண்களைத்‌ தொடர்பு கொள்ளலாம்‌.