தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் ஏராளமான குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து வில்லத்தனத்தை கொப்பளிக்கும் வில்லியாக மிரட்டிய மிகவும் திறமையான நடிகை வடிவுக்கரசியின் பிறந்தநாள் இன்று. அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம் :


* பிரபலமான சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் நடிகை வடிவுக்கரசி. அவரின் பெரியப்பா தான் மிகவும் புகழ்பெற்ற இயக்குநரான ஏ.பி.நாகராஜன். பணக்கார குடும்பத்தை சேர்ந்த வடிவுக்கரசியின் திடீரென குடும்பம் பொருளாதார இழப்பு காரணமாக பல துயரங்களை சந்தித்தனர். 




* குடும்பத்தின் பொருளாதார சிக்கல் காரணமாக துணி கடையில் கேஷியராக  வேலை செய்து கொண்டே சென்னை தூர்தர்சனில் தொகுப்பாளினியாக வேலை செய்து வந்துள்ளார். சினிமா பின்னணி இருந்தும் வாய்ப்பு தேடி யாரையும் அணுகவில்லை. வாய்ப்பு தானாக வடிவுக்கரசியை நோக்கி வந்தது. 


* ஏ.பி.நாகராஜன் எடுத்த 'வடிவுக்கு வளைகாப்பு’ திரைப்படம் வெளியான நாள் அன்று பிறந்ததால் அவருக்கு வடிவுக்கரசி என பெயரிடப்பட்டது.


* 'கிழக்கே போகும் ரயில்' படத்துக்காக வடிவுக்கரசி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவரை 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தின் மூலம் அறிமுகமப்படுத்தினார் பாரதிராஜா. மாடர்ன் பெண்ணாக அந்த படத்தில் நடித்திருந்தார். 



* நடிப்பில் பெரிய அளவு ஆர்வம் இல்லை என்றாலும் குடும்ப சூழல் காரணமாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். டான்ஸ், ரொமான்ஸ் எல்லாம் வராது என்பதால் குணச்சித்திர கதாபாத்திரங்கள் தான் வேண்டும் என கேட்டு வாங்கி நடித்துள்ளார். 



* தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே இதுவரையில் தேர்வு செய்து நடித்துள்ளார். ஆனால் ஒருபோதும் அதிக சம்பளம் கேட்டு டிமாண்ட் செய்ததே கிடையாது.


* 'வா கண்ணா வா' படத்தில் சிவாஜியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்த வடிவுக்கரசி, 'முதல் மரியாதை' படத்தில் நெகட்டிவ் ரோலில் மனைவியாக நடித்திருந்தார். 


* ஏராளமான படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு என ஒரு தனி அடையாளத்தை பெற 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.


*சிவாஜி முதல் தனுஷ் வரை அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் வடிவுக்கரசி நடித்துள்ளார். 



 


* 'அருணாச்சலம்' படத்தில் கொடூரமான வில்லியாக வேதவல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்த வடிவுக்கரசிக்கு பாராட்டுக்கள் குவிந்தது. அவரின் உடல் மொழி, வசன உச்சரிப்பு என அனைத்தும் இன்றும் 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் மிகவும் பிரபலம். 


* 1998ம் ஆண்டு இயக்குநர் சபாபதி தக்ஷிணாமூர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் இடையே இருந்த சில பிரச்சினை  காரணமாக 2001ம் விவாகரத்து பெற்றார். அவரின் திரை வாழ்க்கை வெற்றிகரமாக அமைந்து இருந்தாலும் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது. 


* வெள்ளித்திரை மட்டுமின்றி இன்றும் சின்னத்திரையில் மிகவும் பிஸியான ஒரு நடிகையாக வலம் வருகிறார் வடிவுக்கரசி. 


* திரைப்படங்களில் வில்லியாக நடித்து இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ஒரு நல்ல உள்ளம் கொண்ட நல்ல ஒரு மனுஷியாக வாழ்ந்து வருகிறார்.