2023ஆம் ஆண்டில் வெளியான சிறந்த படங்களுக்கான தேசிய விருது பட்டியல் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. தமிழில் பார்க்கிங் படத்திற்கு 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் சிறந்த படமாக உள்ளொழுக்கு படத்திற்கும், சிறந்த துணை நடிகையாக ஊர்வசிக்கும் விருது அறிவிக்கப்பட்டது. மேலும், கேரள ஸ்டோரி படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்குள்ளானது. எதன் அடிப்படையில் இப்படத்திற்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால், 2023இல் பல சிறந்த படங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஆடு ஜீவிதம் படத்திற்கு விருது அறிவிக்கப்படாதது சர்ச்சையானது. அதேபோன்று தமிழில் வெளியான அயோத்தி, மாமன்னன் போன்ற படங்களுக்கு விருது அளிக்கப்படாததும் சர்ச்சையானது. இந்நிலையில், தேசிய விருது குழு ஆடு ஜீவிதம் படத்திற்கு விருது வழங்கப்படாததற்கான காரணத்தை தெரிவித்திருந்தது. இதில், பிருத்விராஜூவின் நடிப்பும் எதார்த்தமானதாக இல்லை. செயற்கைத்தனங்கள் அதிகம் இருந்ததாக தெரிவித்தது.
இந்நிலையில், இந்தி படமான ஜவான், தெலுங்கு படமான பகவத் கேசரிக்கு எதன் அடிப்படையில் விருது அளிக்கப்பட்டது. இந்த படங்கள் மிகவும் எதார்த்தமான படைப்பா, பாலைய்யா நடித்த பகவத் கேசரி எதன் அடிப்படையில் எதார்த்தமான படைப்பாக கருத முடியும் என்றும் சினிமா விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், உள்ளொழுக்கு படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்ற நடிகை ஊர்வசி விருது வழங்கும் குழுவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
எந்த அடிப்படையில் தேசிய விருது வழங்கப்படுகிறது. உள்ளொழுக்கு படத்திற்காக எனக்கும் பூக்காலம் படத்திற்காக நடிகர் விஜயராகவனுக்கும் சிறந்த துணை நடிகர் பிரிவில் விருது அளிக்கப்பட்டது. ஆனால், எங்கள் இருவருக்கும் சிறந்த நடிகர்களுக்கான விருது ஏன் பகிர்ந்தளிக்கப்படவில்லை. நாங்கள் உயிரை கொடுத்து நடிக்கிறோம். வரி செலுத்துகிறோம். அரசு தருவதைத்தான் தர வேண்டும் என்று சொல்வதை ஏற்க முடியாது. அரசு தரும் விருதை ஓய்வூதியமாகவும் கருத முடியாது என ஊர்வசி கணடனம் தெரிவித்துள்ளார். இவரது கருத்திற்கு மலையாள சினிமா ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.