தேசிய விருது குறித்து ஊர்வசி
2023ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான தேசிய விருது பட்டியல் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. தமிழில் பார்க்கிங் படத்திற்கு 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் சிறந்த படமாக உள்ளொழுக்கு படத்திற்கும், சிறந்த துணை நடிகையாக ஊர்வசிக்கும் விருது அறிவிக்கப்பட்டது. மேலும், கேரள ஸ்டோரி படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்குள்ளானது. குறிப்பாக தேசிய விருதுக்குழுவின் மேல் நடிகை ஊர்வசி முன்வைத்துள்ள விமர்சனங்களுக்கு ரசிகர்களிடம் ஆதரவு பெருகியுள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் சிறந்த படங்கள் வெளியானபோது இந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்படாதது குறித்து தனது கருத்தை வெளிப்படியாக அவர் தெரிவித்துள்ளார். அரசு தரும் விருது நடிகர்களுக்கான ஓய்வூதியம் கிடையாது என அவர் காட்டமாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தென் இந்திய படங்களின் சிறப்பை எடுத்துச் சொல்லக் கூடிய நபர்கள் தேசிய விருதுக் குழுவில் இருக்கிறார்களா என்பது தான் என் பிரதான கேள்வி. தமிழ் மற்றும் மலையாள படங்களைப் பற்றியும் படைப்பாளிகளைப் பற்றி எடுத்துச் சொல்லக் கூடிய சரியான விருதுக் குழு உறுப்பினர்களை இங்கிருந்து தேர்வு செய்யப்படவில்லை . தமிழில் இருந்து பல படங்கள் பரிந்துரைக்கப்பட்டது. இந்த படங்களை எல்லாம் அங்கு விருதுக் குழுவில் பார்த்தார்களா என்று கூட தெரியவில்லை. இந்த கேள்வியை நான் அரசிடம் கேட்கவில்லை. ஆனால் இங்கு வெளியான தரமான படங்களைப் பார்த்து தேர்வு செய்யும் தகுதி உடையவர்கள் ஜூரி குழுவில் இருந்தார்களா என்கிற சந்தேகம் இந்த வருடம் அதிகம் எழுந்துள்ளது. இங்கிருந்து ஜூரியாக போனவர்கள் தான் அதற்கு பதிலளிக்க வேண்டும் .
இது ஒன்றும் 10 ஆவது பரீட்சை இல்லை. என் சினிமா என்பது என் சினிமா. நான் எடுத்த மாதிரியே நீங்கள் படம் எடுக்க முடியாது. என்னையும் கேட்கமுடியாது. ஆனால் கதைக்கு ஏற்ப , சூழ்நிலைக்கு ஏற்ப குறை சொல்ல முடியாத அளவிற்கு ஒரு படம் இருக்கிறதா என்பதே முக்கியம். இங்கிருந்து ஜூரியாக செல்பவர்கள் ஒவ்வொரு படைப்பாளியைப் பற்றி தெரிந்துகொண்டு போக வேண்டும். ஜே பேபி படத்திற்கு விருது கிடைக்காததில் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான். அது நிஜமாக வாழ்ந்த கதாபாத்திரம். இதுவே நிறைய பேரும் புகழும் வாங்கிய ஒருத்தரைப் பற்றி படம் எடுத்திருந்தால் அந்த படத்திற்கு விருது கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் மக்களோடு மக்களாக வாழ்ந்த ஒரு பெண்ணைப் பற்றி படம் என்பதால் இந்த படத்தின் மீது கவனம் செலுத்தவில்லை. குறைந்தபட்சம் இந்த மாதிரியான படங்களுக்கு விருது வழங்கப்பட்டாததற்கான முறையான காரணத்தை இங்கிருந்து சென்ற ஜூரிகள் சொல்லவேண்டும்.