தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான ஊர்வசி தனது முதல் திருமணத்திற்குப் பிறகு தான் சந்தித்த வேதனையான அனுபவங்களைப் பற்றி வெளிப்படையாக மனம் திறந்து பேசியுள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் வீட்டில் குடியும் விருந்தும்
ஒரு நேர்காணலில் பேசிய ஊர்வசி, தன்னுடைய முதல் திருமண வாழ்க்கை காலக்கட்டங்கள் தன்னை எப்படி மாற்றியது எனவும் கூறியுள்ளார். அதாவது எனது முதல் திருமணத்திற்குப் பிறகு நான் அந்த வீட்டிற்குச் சென்றேன். அப்போது அங்கு நான் பிறந்த வீட்டின் வாழ்க்கை முறை போல இல்லை என்பதை உணர்ந்தேன். காரணம் புகுந்த வீட்டில் இருந்த அனைவரும் மிகவும் முற்போக்கான சிந்தனை கொண்டவர்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, குடித்து, சாப்பிடுவார்கள். தாய்மார்களும் குழந்தைகளும் ஒன்றாகக் குடிப்பார்கள். இதனைக் கண்டு நான் முதலில் அதிர்ச்சியடைந்தேன்.
பின்னர் நான் அந்த குடும்பத்துடன் என்னை இணைத்துக் கொண்டு செயல்பட முயற்சித்தேன். எனினும் நான் மெதுவாக ஒரு வித்தியாசமான நபராக மாறி வருவதை உணர்ந்தேன். அதுவும் மிகவும் தாமதமாகத் தான் தெரிந்தது. தனது திருமண முடிவு சரியானது என்பதை தனது குடும்பத்தினரிடம் நிரூபிப்பதில் தான் மிகவும் உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருந்தேன்.
மீட்டுக்கொண்டு வந்த நண்பர்கள்
இதற்கிடையில் குடிப்பழக்கம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியது. தனது சூழ்நிலையை உண்மையிலேயே புரிந்துகொண்ட ஒரே நபர் கலா மாஸ்டர் மட்டும் தான். அவர் என்னைத் திருத்தி மீண்டும் ஒரு பாதையில் கொண்டு வர முயன்றார். ஆனால் அதற்குள், நான் ஏற்கனவே வேறொருவராகிவிட்டேன். நான் மெதுவாக ஒரு குழிக்குள் சென்று கொண்டிருந்தேன்.
சினிமாவில் நுழைந்தபோது தான் கேட்ட கதைகளை நினைவு கூர்ந்த ஊர்வசி, “கடினமான படப்பிடிப்புகளுக்குப் பிறகு, மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஓய்வெடுக்க ஒரு பானம் கொடுப்பார்கள் என்று மக்கள் சொல்வார்கள்” என்றார். அப்படியாக மது என் வாழ்க்கையில் இணைந்திருந்தது. திருமண வாழ்க்கையில் எழுந்த வாக்குவாதங்கள் மற்றும் மன அழுத்தத்தின் போது குடிப்பழக்கம் அதிகரித்தது. கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போதெல்லாம், குடிப்பழக்கம் அதிகரித்தது. அதனுடன், என் உடல்நிலை மோசமடைந்தது. உணவு மற்றும் தூக்கம் இரண்டும் இல்லாமல் போகும்போது, மன நிலை மாறியது.
ஆனால் கடைசியில் தனது நண்பர்களும் தனிப்பட்ட ஊழியர்களும் தன்னை இந்த விஷயத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்தனர். ஒரு பெண் தன் கணவனின் வீட்டில் வாழ வேண்டும் என நினைத்து என் மன நிலையை மாற்றினேன். திரும்ப அதை மாற்ற நீண்ட நேரம் பிடித்தது” என ஊர்வசி தெரிவித்துள்ளார்.
ஊர்வசி தனிப்பட்ட வாழ்க்கை
நடிகை ஊர்வசி பிரபல நடிகர் மனோஜ் கே.ஜெயனை கடந்த 2000ம் ஆண்டு காதல் திருமணம் செய்தார். அவர்களுக்கு தேஜா லட்சுமி என்ற மகள் உள்ளார். இருப்பினும் 2008ம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்தனர். அதன்பின்னர் 2013ம் ஆண்டு ஊர்வசி சிவ பிரசாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.