தமிழ் சினிமாவில் க்ளாசிக் நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. கிட்டத்தட்ட 21 ஆண்டுகளாக நடித்து வரும் த்ரிஷா சில காலம் பெரியளவிலான படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இத்தகைய சூழலில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தனது நடிப்பாலும் அழகாலும் அனைவரையும் கிறங்கடித்தார் த்ரிஷா. தனது இடத்தை மீண்டும் தக்கவைத்துக்கொண்டார். தற்போது 14 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார் நடிகை த்ரிஷா. அதே மாதிரி மற்றொரு நடிகருடன் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பின் இணைகிறார். அந்த நடிகர் வேறு யாரும் இல்லை தெலுங்கு சூப்பர்ஸ்டார் நடிகர் சிரஞ்சீவிதான்
த்ரிஷா சிரஞ்சீவி
த்ரிஷா மட்டும் சிரஞ்சீவி இருவரும் இணைந்து நடித்தத் திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஸ்டாலின் படத்தில். கடந்த 2020-ஆம் வருடம் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் நடிக்க இருந்தார் த்ரிஷா. ஆனால் ஒரு சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக அந்தப் படத்தில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார் த்ரிஷா.
17 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ஜோடி
இயக்குநர் கல்யாண் குமார் இயக்கும் அடுத்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. குமார் பெஜாவாடா படத்திற்கு திரைக்கதை அமைக்கிறார். ஒரு தந்தை மகனுக்கு இடையிலான உறவை மையப்படுத்திய கதையாக இந்தப் படம் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் கதாநாயகியாக நடிக்க இருக்கும் த்ரிஷாவுக்கு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்தப் படத்தைக் குறித்தான கூடுதல் தகவல் வெளியாகும்.
த்ரிஷா நடித்து வரும் படங்கள்
தற்போது த்ரிஷா லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். தொடர்ந்து அருண் வசீகரன் இயக்கும் தி ரோட் என்கிற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் த்ரிஷா. மிக பயங்கரமான ரிவெஞ்சு ஸ்டோரியாக உருவாக இருக்கிறது இந்தப் படம். த்ரிஷாவுடன் மேலும் மூன்று நடிகர்கள் இந்தப் படத்தில் இணைய இருக்கிறார்கள்.