தன்னைப் பற்றி ஆதாரமில்லாமல் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்த முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு எதிரான திரிஷா சட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார்.
சேலம் மாவட்ட அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்த ஏ.வி.ராஜூ கடந்த சில வாரம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அவர் செய்தியாளர் சந்திப்பின் போது சேலம் மாவட்ட அதிமுகவினரையும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்து பேசினார். அதில் 2017 ஆம் ஆண்டு கூவத்தூரில் நடைபெற்ற சம்பவங்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது நடிகை திரிஷாவை பற்றி ஆதாரமில்லாமல் அருவருக்கத்தக்க வகையில் கருத்துகளையும் தெரிவித்தார். மேலும் நடிகர் கருணாஸ் மற்றும் திரைத்துறையினர் பெயர் குறிப்பிடாமல் சில நடிகைகள் என்றும் பேசியிருந்தார்.
ஏவி ராஜூவின் இந்த வீடியோ கடும் எதிர்ப்புகளை பெற்றது. திரைத்துறையினர் அவருக்கு எதிரான தொடர்ந்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். தென்னிந்திய நடிகர் சங்கம், பெஃப்சி அமைப்பு உள்ளிட்டவையும் ஏ.வி.ராஜூ செயலை வன்மையாக கண்டித்தன. இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த த்ரிஷா, கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும், கேவலமான மனிதர்களையும் திரும்ப திரும்பப் பார்ப்பது அருவருப்பானது. எனது தரப்பில் இருந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஏ.வி.ராஜூ தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். தான் திரிஷா பெயரை சொல்லவில்லை என்றும், அவரை மாதிரி என குறிப்பிட அப்படி சொன்னதாகவும் விளக்கம் கொடுத்தார்.
இந்நிலையில் தன்னை பற்றிய அவதூறு தகவல்களுக்கு 24 மணி நேரத்துக்குள் பிரபல ஊடக நிறுவனங்கள் வாயிலாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஏ.வி.ராஜூ வீடியோ எந்தந்த தளங்களில் வெளியானதோ அதனை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அதில் ஒரு குறிப்பிட்ட ஒரு தொகை மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 4 நாட்களுக்குள் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். இல்லாவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.