லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சரவணன் இயக்கத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் திரிஷா நடிப்பில் டிசம்பர் 30ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் 'ராங்கி'. இப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. 


 


 



வெட்கத்தில் சிவந்த திரிஷா :


இந்த விழாவில் நடிகை த்ரிஷாவை பேச அழைத்த தொகுப்பாளர் "இவங்க அறிமுகமானது ஜோடி - இவங்களுக்கு இருக்கிற ரசிகர்கள் கோடி, தளபதியோட இவங்க சேர்ந்தா அது கில்லி - இந்த அழகுக்காக காத்து இருக்குது டெல்லி, சீயான் கூட இவங்க நடிச்ச அது சாமி -  இவங்களுக்கு நிகரா யாரவது இருந்தா காமி, சூப்பர் ஸ்டார் கூட இவங்க சேர்ந்தா அது பேட்ட - பாக்ஸ் ஆஃபீஸுல இவங்க வந்தாலே எல்லாருக்கும் வேட்ட"  என்று அழைத்த தொகுப்பாளரின் வசனங்களை கேட்ட திரிஷா வெட்கத்தில் சிவந்தார்.


 






 


திரிஷா 'ராங்கி' படம் பற்றி : 



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட த்ரிஷா ராங்கி படம் குறித்து பேசுகையில் " இந்த படத்தை கொண்டு வர முக்கியமான காரணமாக இருந்த லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் சாருக்கும், லைகா தலைவர் திரு.தமிழ் குமரனுக்கும் நன்றி. கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாக இருப்பதால் எந்த வித சமரசமும், கட்டுப்பாடுகளும் இல்லாமல் அதே சமயத்தில் படத்தின் தயாரிப்பு மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் உஸ்பெகிஸ்தான் போன்ற ஒரு இடத்தில் படப்பிடிப்பை நடத்துவது பெரும் சவாலாக இருந்தது. வழக்கமாக, ஐரோப்பா மற்றும் லண்டன் போன்ற வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது எளிதாக இருக்கும் ஆனால்  உஸ்பெகிஸ்தான் போன்ற இடங்களில் அது அவ்வளவு எளிதல்ல.


 



இப்படத்தின் ரிலீசுக்காக எங்கள் ஒட்டுமொத்த குழுவும் கடந்த இரண்டு வருடங்களாக காத்திருந்தோம். ஒரு நடிகையாக எனது கடமையை முடித்து விட்டேன்; ஆனால் இப்படத்தை ஒரு சிறப்பான படமாக்கியதில் முக்கிய பங்கு வகிப்பது தொழில்நுட்பக் குழுதான். இந்த படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆக்‌ஷன் காட்சிகளை கூட மிகவும் இயல்பாக எடுத்திருந்தார் இயக்குனர் சரவணன். இப்படம் நிச்சயமாக ரசிகர்களால் வரவேற்கப்படும் என நம்புகிறோம். படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது இசையமைப்பாளர் சத்யாவின் பாடல்கள். இந்த ஆண்டு எனக்கு ஒரு சிறப்பான ஆண்டாகவே தொடக்கம் முதல் முடிவு வரை இருந்ததில் மிக்க மகிழ்ச்சி" என கூறினார் நடிகை திரிஷா. 


 






 


நடிகை திரிஷா பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.