காவாலா பாடல் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு முறை டிரெண்டிங்கில் இருக்கிறார் நடிகர் தமன்னா. சினிமாவில் 18 ஆண்டுகளாக இருந்து வரும் தமன்னா தனது  கரியரின் இரண்டாம் கட்டத்தை தொடங்கியதுபோல் உற்சாகமாக இருக்கிறார். தான் தேர்வு செய்யும் கதைகளில் கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டு புதுமையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் தமன்னா. தனது சினிமா கரியரில் வெற்றி தோல்வி என இரண்டையும் சந்தித்த தமன்னா, தான் எடுத்த சில தவறான முடிவுகளைப் பற்றியும் இப்போது மனம் திறந்து பேசிவருகிறார்.


அந்த வகையில் நடிகர் விஜயுடன் தான் இணைந்து நடித்து சுரா படத்தின் தோல்வி தனக்கு முன்னதாகவே தெரியும் என்று வெளிப்படையாக அவர் பேசியுள்ளது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


 விஜய் 50


 நடிகர் விஜயின் 50-வது படமாக உருவாகியது சுறா திரைப்படம். விஜய் , தமன்னா, வடிவேலு இதில்  நடித்திருந்தனர். எஸ்.பி. ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்கி சங்கிலி முருகன் இந்தப் படத்தை தயாரித்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை விநியோகித்தது. விஜயின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தப் படம் சுறா. விஜயின் கரியரிலேயே அவரது மிகப்பெரிய தோல்விப்படமாக சுறா கருதப்படுகிறது. மணிஷர்மா இசையமைத்த பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த தமன்னா, இது குறித்து  அண்மையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் வெளிப்படையாக பேசினார்.


படம் தோல்விதான் என்று முன்னதாகவே தெரியும்..


சில படங்களில் நடிக்கும்போதே அந்தப் படம் வெற்றிபெறாது என்று நமக்கு தெரிந்துவிடும். சுறா படத்தின் படப்பிடிப்பின்போதே எனக்கு அந்தப் படம் தோல்வியடையும் என்று தெரிந்தது. இருந்தாலும் நான் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்தேன். நான் நடித்த படங்களிலேயே எனது நடிப்பு எனக்கு பிடிக்காத படங்களில் சுறாவும் ஒன்று. இனிமேல் அந்த மாதிரியான படங்களில் நான் நடிக்க மாட்டேன். எனக்கு அந்தப் படம் பிடிக்கும். இருந்தாலும் மிக சுமாரான ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததாக நான் உணர்கிறேன்.


சினிமா என்பது ஒரு மிகப்பெரிய கலை வடிவம். அதில் நம்முடைய செயல்களுக்கு நாம்தான் முழு பொறுப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்” என தமன்னா கூறியிருக்கிறார்


ஜெயிலர்


தற்போது நெல்சன் இயக்கியிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார் தமன்னா. இந்தப் படத்தில் அவர் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது ஜெயிலர்.