தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் சுனைனா தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக சமூக வலைத்தளம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 






2005ல் தெலுங்கில் வெளியான குமார் vs குமாரி என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சுனைனா. 2008 ஆம் ஆண்டு தமிழில் வெளியான காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படம் சுனைனாவுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், வன்மம்,நம்பியார், கவலை வேண்டாம், தொண்டன், காளி, சில்லுக்கருப்பட்டி, எனை நோக்கி பாயும் தோட்டா, ட்ரிப், எஸ்டேட், லத்தி என 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 






நடிகர் விஜய் நடித்த தெறி படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார். இப்படியான நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ச்சியாக படம் நடித்து வரும் சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவருடன் கைகோர்த்து இருப்பது போல புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். இதனை கண்ட இணையவாசிகள் சுனைனாவுக்கு நிச்சயம் முடிந்து விட்டதா, இல்லை ஏதேனும் பட ப்ரோமோஷனா என இஷ்டத்துக்கு கருத்துகளை பதிவிட தொடங்கினர். 


இப்படியான நிலையில் சுனைனா தன்னுடைய பதிவின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதன்படி, “வணக்கம், எனது கடைசி பதிவு பற்றி சில கட்டுரைகள் சமூக வலைத்தளங்களில் வலம் வருவதை நான் பார்க்கிறேன்.இதனை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்பது மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு வரும் அழைப்புகளையும், தனிப்பட்ட மெசெஜ்களையும் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.