இந்திய திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்தியாவின் பிரபல திரையுலகில் முடிசூடா ராணியாக வலம் வந்தவர். இவர் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி உயிரிழந்தார்.
ஜான்வி கபூர் உருக்கம்:
இவரது 5ம் ஆண்டு நினைவு நாள் வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஸ்ரீதேவி – போனி கபூர் தம்பதியின் மகள் ஜான்வி கபூர். இவரும் தனது தாயைப் போல திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக உள்ள ஜான்வி கபூர், தனது தாயின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
தாய் ஸ்ரீதேவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஜான்வி கபூர், “நான் இன்னும் உங்களை எங்கும் பார்க்கிறேன் அம்மா. நான் செய்யும் அனைத்தும் உங்களை பெருமைப்படுத்தும் என்று நம்புகிறேன். நான் எங்கு சென்றாலும் எதைத் தொடங்கினாலும் முடிவது உங்களுடன்தான் அம்மா” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
முன்னணி நடிகை ஸ்ரீதேவி:
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியில் பிறந்தவர் ஸ்ரீதேவி. 1967ம் ஆண்டு கந்தன் கருணை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையில் அறிமுகமானார். பின்னர், தெலுங்கிலும் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமான ஸ்ரீதேவிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது.
தமிழின் முன்னணி ஹீரோக்களுடனான ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தெலுங்கின் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி, கிருஷ்ணா உள்ளிட்ட பலருடன் நடித்து அங்கும் மிகவும் பிரபலமானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருடன் இணைந்து இவர் நடித்த மூன்று முடிச்சு படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது. பின்னர், கமல்ஹாசனுடன் இவர் நடித்த 16 வயதினிலே படம் பட்டிதொட்டியெங்கும் ஸ்ரீதேவியின் புகழை பெற்றுத்தந்தது. தமிழில் சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று பலருடன் ஜோடி சேர்ந்து அசத்தினார்.
மரணம்:
தென்னிந்தியாவில் ஸ்ரீதேவியின் புகழ் கொடிகட்டிப் பறந்த அதேசமயம் இந்தியிலும் 1972ம் ஆண்டு முதல் நடிக்கத் தொடங்கினார். அங்கும் ஜிதேந்திரா, தர்மேந்திரா, அமிதாப்பச்சன் என நட்சத்திரங்களுடன் நடித்து இந்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். கடந்த 2018ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது இளையமகளுடன் நட்சத்திர விடுதியில் இருந்தபோது உயிரிழந்தார். பத்மஸ்ரீ விருது வென்ற ஸ்ரீதேவிக்கு இந்தியாவில் ரசிகர்கள் புடைசூழ இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் கடந்த 2018ம் ஆண்டு தடாக் எனும் படம் மூலமாக அறிமுகமானார். பின்னர், கோஸ்ட் ஸ்டோரிஸ், குஞ்சன் சக்சேனா, ரூகி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது மிஸ்டர் & மிஸ்ஸஸ் மகி படத்திலும், பவால் படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் படிக்க: Drums Sivamani : ரொமான்டிக் க்ரைம் த்ரில்லர் படம்.. நீண்ட நாட்களுக்குப் பின் இசையமைப்பாளராக களமிறங்கும் டிரம்ஸ் சிவமணி..!
மேலும் படிக்க: Watch Video : மைம் மூலம் காதலை வெளிப்படுத்திய கோபி... கண்கலங்கிய போட்டியாளர்கள்... களைகட்டிய குக் வித் கோமாளி மேடை