பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் சிறு வயதில் மேடை ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


குழந்தை நட்சத்திரம் - நடிகை 


நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளாக ஸ்ருதிஹாசன், சிறு வயதில் சிவாஜிகணேசன், கமல் நடித்த தேவர் மகன் படத்தில் இடம் பெற்ற “போற்றிப்பாடடி பெண்ணே” பாடல் மூலம் திரையுலகில் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து கமல் இயக்கி நடித்த ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதன்பின்னர் அமெரிக்கா சென்று இசையில் கவனம் செலுத்திய ஸ்ருதிஹாசன் தனக்கு வந்த ஏராளமான சினிமா வாய்ப்புகளை மறுத்து 2009 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான லக் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 


தொடர்ந்து தமிழில் சூர்யா நடித்து 2011 ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் எண்ட்ரீ கொடுத்தார். இதன்பின்னர் விஜய்யுடன் புலி,அஜித்துடன் வேதாளம், தனுஷூடன் “3”, விஷாலுடன் பூஜை, விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ என குறிப்பிடத்தகுந்த படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.


மேலும் கமல்ஹாசன் நடித்த உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு ஸ்ருதி இசையமைத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழிப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். கடைசியாக அவர் நடிப்பில் தெலுங்கில் சீரஞ்சிவிக்கு ஜோடியாக “வால்டர் வீரய்யா”, பாலகிருஷ்ணாவுடன் “வீர சிம்ஹா ரெட்டி” ஆகிய படங்களில் நடித்திருந்தார்.  


தான் தொடர்ந்து இந்தி, தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருப்பதால் தமிழ் சினிமாவில் நடிக்க முடியவில்லை எனவும், தன் அப்பா கமல்ஹாசனை பார்த்தே பல மாதங்கள் ஆகிவிட்டதாகவும் சமீபத்திய நேர்காணலில் ஸ்ருதி ஹாசன் தெரிவித்திருந்தார். மேலும் தற்போது சலார் என்ற தெலுங்கு படத்திலும், தி ஐ என்ற ஆங்கில படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்தி வருகிறார். பான் இந்திய படமாக உருவாகி வரும் இப்படத்தின் மூலம் கன்னடத்திலும் அவர் கால் பதிக்க உள்ளார். 


காதலருடன் ஸ்ருதிஹாசன் 


இதற்கிடையில் இவர் மும்பையைச் சேர்ந்த பிரபல டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். தங்கள் காதலை பொதுவெளியில் அறிவித்த பிறகு, ஸ்ருதி தொடர்ந்து ஜோடியாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை தன் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தன் சிறு வயதில் சிங்கப்பூரில் நடந்த மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


அதில், முதலில் ஆங்கிலத்தில் "ladies and gentlement" என தனது உரையாடலை தொடங்கும் ஸ்ருதியை, கமல்ஹாசன் தமிழில் பேசும்படி கூறுகிறார். உனக்கு தமிழ் தெரியுமா என கமல் கேட்க, ஸ்ருதியும் ஆம் என தலையாட்டுகிறார். பின் என்ன பேச வேண்டும் என யோசித்து விட்டு, தன் உரையாடலை தொடங்குகிறார். அவர் தன் பேச்சில், “பெரியோர்களே.. தாய்மார்களே.. என்னை போன்ற குழந்தைகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம். நான் இதுவரை சினிமாவில் பாடியிருக்கேன். தேவர்மகன் படத்துல..ஸ்டேஜ்ல இதுதான் முதல் தடவை. கை,கால் எல்லாம் நடுங்குது. பட்டுப்பாவாடை போட்டு இருக்குறதால வெளிய தெரியல.. நான் இப்ப பாடுறேன்.. நல்லா இருந்தா கை தட்டுங்க.. நல்ல இல்லைன்னா அப்புறமா கைதட்டுங்க” என மழலையாக பேசுகிறார்.