உலகநாயகன் கமல்ஹாசன் சினிமா வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து 64 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தனது தந்தையின் இந்த சாதனையை பாராட்டியுள்ளார் கமலின் மகளும், நடிகையுமான ஷ்ருதிஹாசன்.


சினிமாவில் 64 வருடங்கள்


1960 ஆம் வருடம்  களத்தூர் கண்ணம்மா என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார் கமல்ஹாசன். இந்தப் படத்தில் இடம்பெற்ற அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடல் கமல்ஹாசனின் பெயரை முதல் முறையாக இந்திய சினிமாவிற்கு அறிமுகம் செய்தது.


களம் இறங்கிய முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டிச் சென்றார் கமல். அன்று தொடங்கிய சினிமாவின் மீதான ஆர்வம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது அவருக்கு. இந்தி , மலையாளம், தெலுங்கு, கன்னடம், என அனைத்து மொழிகளிலும் வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். ஒரு நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர், நடன கலைஞர், பாடகர், என சினிமாவில் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டவர் கமல்.


இந்திய சினிமாவுக்கு வந்த கொடை


என்றும் தீராத சினிமா மீதான கமலின் காதல், இந்திய சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லும் படங்கள் உருவாக காரணமாக இருந்திருக்கிறது. அவர் திரைக்கதை எழுதிய படங்கள் இன்று சினிமாவை பயில நினைப்பவர்களுக்கு,  பாடமாக இருந்து வருகின்றன. கமல்ஹாசன் என்னும் ஒற்றை நபரால் ஈர்க்கப்பட்டு பல புதிய இயக்குநர்கள் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள்.


தந்தைக்கு மகளின் வாழ்த்து






தனது தந்தை கமல்ஹாசன் சினிமாவில் 64 ஆவது வருடத்தில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு  கமலின் மகளான நடிகை ஷ்ருதி ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். இதில் ”ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள் என அனைத்தையும் பார்த்திருக்கார் அவர். சினிமா இன்ட்ஸ்ட்ரியை  உயர்த்துவதற்கான இந்த உலகநாயகனின் விடாமுயற்சிக்கு இடையில் எந்த தடையும் குறுக்கிட முடியாது. ஆறு தசாப்தத்திற்கும் மேலாக  நிகரற்றவராக கலைஞனாக இருந்து வரும் அரசன் இன்று சினிமாவில் தனது 64-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.  


இந்தியன் 2


ஷங்கர் இயக்கி வெளியாகவுள்ள இந்தியன் திரைப்படத்தின் பாகத்தில்  கமல்ஹாசன், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், ஐஷ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம், எஸ். ஜே, சூர்யா, சித்தார்த் சமுத்திரகனி, பாபி சிம்ஹா மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.